கோடை விடுமுறையால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு: ‘செக்கிங் கவுன்டர்’ 72ல் இருந்து 120 ஆக உயர்கிறது

சென்னை: சென்னை விமான நிலையத்தில், கோடை விடுமுறை பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக சர்வதேச முனையத்தில், பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதையடுத்து சென்னை சர்வதேச முனையத்தில் பயணிகளின் செக்கின் கவுன்டர்கள் 72லிருந்து 120 ஆக அதிகரிக்கப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை, சர்வதேசம் மற்றும் உள்நாட்டு முனையங்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரத்தில் இருந்து 55 ஆயிரம் வரை இருந்தது. அந்த எண்ணிக்கை சமீப காலமாக, மேலும் அதிகரித்து 60 ஆயிரத்தையும் கடந்து கொண்டு இருக்கிறது.

குறிப்பாக சர்வதேச முனையமான டெர்மினல் 2 பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. நள்ளிரவு, அதிகாலை மற்றும் வார கடைசி நாட்கள் போன்றவைகளில், ஒரே நேரத்தில் பல விமானங்கள், ஒன்றன்பின் ஒன்றாக இயக்கப்படுவதால் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னை சர்வதேச முனையத்தில் பயணிகளுக்கு, பாதுகாப்பு சோதனைகள் நடத்தக்கூடிய கவுன்டர்கள் தற்போது, ஏ, பி, சி என்று 3 பிரிவுகளாக, ஒரு பிரிவுக்கு 24 கவுன்டர்கள் வீதம், மொத்தம் 72 கவுன்டர்கள் உள்ளன. இந்த 72 கவுன்டர்களிலும், பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால், பயணிகள் சோதனைகளை முடித்துவிட்டு, விமானங்களில் ஏறுவதற்கு கால தாமதம் ஆகின்றன. இதனால் துபாய், சிங்கப்பூர், கோலாலம்பூர், அபுதாபி, லண்டன் உள்ளிட்ட விமானங்கள் தாமதமாக புறப்படும் நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில் வருகிற கோடை விடுமுறைகளில் பயணிகள் கூட்டம் மேலும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், கூடுதல் செக்கின் கவுன்டர்கள், சென்னை சர்வதேச முனையம் டெர்மினல் 2ல் ஏற்படுத்த இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்து, துரித நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி தற்போது பேஸ் 2 கட்டுமான பணிகள், டெர்மினல் 3 வேலைப்பாடுகள் நடந்து வருகின்றன. அந்த டெர்மினல் 3ல் அமைக்கப்படும் செக்கிங் கவுன்டர்களில் 48 கவுன்டர்கள், டெர்மினல் 2 செக்கிங் கவுன்டர்களுடன் இணைக்கப்பட்டு, 120 கவுன்டர்களாக, பகுதி டி, இ புதிதாக உருவாக்க திட்டமிடப்பட்டு, அந்த பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடியும்போது, பயணிகள் கூட்ட நெரிசல்கள் இல்லாமல், விமானங்களில் ஏற முடிவதோடு, விமானங்களும் தாமதம் இல்லாமல் புறப்பட்டு செல்லும் வாய்ப்பு ஏற்படும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

The post கோடை விடுமுறையால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு: ‘செக்கிங் கவுன்டர்’ 72ல் இருந்து 120 ஆக உயர்கிறது appeared first on Dinakaran.

Related Stories: