கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் சிப்காட் நிறுவனத்தின் மூலமாக 9 தொழிற்பூங்காக்கள் 1,800 ஏக்கர் பரப்பளவிலேதான் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த 4 ஆண்டுகளில் திமுக அரசு 32 தொழிற்பூங்காக்கள் 16,880 ஏக்கர் பரப்பளவிலே அமைக்கப்பட்டிருக்கின்றன. அதிமுக 10 ஆண்டு ஆட்சி காலத்தில் 25 தொழிற்பேட்டைகள் இருந்தது. கடந்த 4 ஆண்டு காலத்தில் மட்டும் 28 தொழிற்பேட்டைகள் 1,213 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2000ம் ஆண்டு சென்னையில் டைடல் பூங்காவை முதல்வர் கலைஞர் தொடங்கி வைத்தார். இன்று தமிழகம் முழுவதும் டைடல் பூங்கா, மினி டைடல் பூங்கா தொடங்கப்பட்டு வருகின்றன.
ஒன்றிய அரசு நீட், கியூட் போன்றிருக்கக்கூடிய பள்ளி மாணவர்களை தொடர்ந்து சிக்கல்களுக்கு உள்ளாக்கக்கூடிய, நவீன குலக்கல்வி திட்டத்தை இன்று நம்மீது திணித்துக் கொண்டிருக்கிறது. அதனால் கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய குடும்பங்களை சார்ந்த முதல் தலைமுறை மாணவர்கள் உயர் கல்வி கற்பது தடைபடும் என பல ஆண்டுகளாக தமிழ்நாடு குரல் கொடுத்து வருகிறது. இருந்தாலும்கூட ஒன்றிய அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. நாளேடுகளில் நாம் பார்த்தோம். உத்தரபிரதேசத்திலே கும்பமேளா வந்தது.
கும்பமேளாவிற்காக கோடிக்கணக்கான மக்கள் அங்கே வந்தார்கள். லட்சக்கணக்கான மக்கள் அங்கே திரண்டிருக்கிறார்கள் என்று அங்கே இருக்கக்கூடியவர்கள் பெருமைப்பட்டுக்கொள்வது வாடிக்கை. ஆனால் அறிவு சார்ந்த தமிழ் சமூகத்தின் தனிப்பெரும் அடையாளமாக விளங்கக்கூடிய மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு இதுவரையில் 14 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வருகை புரிந்திருக்கிறார்கள் என்பதுதான் இந்த திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிற எங்களுக்கு பெருமை. ஒவ்வொரு ஆண்டும் இந்தி மொழியையும், வடமொழியையும் வளர்த்திட பல நூறு கோடி ரூபாய்களை ஒன்றிய அரசு ஒதுக்கி வருகிறது.
ஆனால் உயர்தனி செம்மொழி என்று அங்கீகரிக்கப்பட்ட தமிழ் மொழியை பாதுகாத்து வளர்த்திட மிக மிக குறைவான ஒரு தொகையைத்தான் ஒன்றிய அரசு ஒதுக்கி வருகிறது. ஆனால், அது குறித்தெல்லாம் நாங்கள் கவலைப்படமல், தமிழ்மொழியை வளர்த்திட மட்டுமன்றி, தமிழ்மொழியின் சிறப்பை உலசெங்கும் கொண்டு செல்ல எவ்வளவு நிதியையும் ஒதுக்கி, பணியாற்ற தயாராக இருக்கிறோம். இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான கோயில்களை கொண்டிருக்கக்கூடிய தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்து சமய அறநிலையத்துறை மிக சிறப்பாக பணியாற்றி வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் 2,662 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. கோயிலுக்கு சொந்தமான 7,327 ஏக்கர் நிலங்களும், 36.38 சதுர அடி மனைகளும், 9.98 லட்சம் சதுர அடி கட்டிடங்களும் இந்த அரசு எடுத்திருக்கக்கூடிய பெரும் முயற்சியின் காரணமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திருக்கோயிலினுடைய வசமாக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.7,185 கோடி. ஊரக வளர்ச்சி துறையில், அதிமுக ஆட்சியில் ஆண்டுக்கு 20 லட்சம் பசுமை வீடுகள் என்று 5 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் 24 ஆயிரம் வீடுகள் அவர்களால் கட்டி முடிக்கப்படவில்லை.
தற்போது திமுக ஆட்சியில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கலைஞர் கனவு இல்லம் என்று 8 ஆண்டுகளில் 8 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 20 ஆயிரம் எங்கே… ஆண்டுக்கு ஒரு லட்சம் எங்கே?
தமிழகம் கடந்த 4 ஆண்டுகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையில் அதிக முன்னேற்றம் பெற்று வருகிறது. குறிப்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த துறைக்கு பொறுப்பேற்ற பிறகு இந்திய மற்றும் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிமுகவின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் ஆண்டுக்கு ரூ.188 என்று மொத்தம் ரூ.2,077 கோடி கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் இந்த துறைக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் தற்போது ஆண்டுக்கு ரூ.386 கோடி என்று கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1933 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக 10 ஆண்டு கால ஆட்சியில் விளையாட்டு வீரர்கள் 3 பேருக்கு மட்டுமே பொதுத்துறையில் வேலை வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 4 ஆண்டு திமுக ஆட்சியில் 93 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கி உள்ளோம். 100 நாள் திட்டத்தில் பெண்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்கிறார்கள். அவர்கள் உழைத்து உழைப்புக்கு ஊதியம் தர ஒன்றிய அரசு தர மறுக்கிறது. நீட்டிய இடத்திலே கையெழுத்தை போட்டுக்கொண்டு நாங்கள் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு போ என்று சொல்லக்கூடிய மனோபாவம், அதன் காரணமாக தமிழ்நாடு இன்றைக்கு வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நம்முடைய பள்ளி மாணவர்களுக்கான கல்வி நிதியை ஒன்றிய அரசு தர மறுக்கிறது. ரூ.2 ஆயிரம் கோடி அல்ல ரூ.10 ஆயிரம் கோடி இழந்தாலும் தமிழ்நாட்டின் கொள்கையை இழக்க மாட்டோம் என்று முதல்வர் சூளுரைத்துள்ளார். மக்கள் நலனுக்கு எதிராக தலைநகரில் இருந்து எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிரான குரல் கொடுப்பதற்கு சென்னை மாகாணம் வழி வழியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் பக்கத்தில்தான் என்றைக்கும் இருப்போம் என்பது இந்த மண்ணின் குணம். வடக்கே இருந்து வரக்கூடிய எந்தவொரு ஆதிக்கத்திற்கும் தமிழ்நாடு வரலாற்றில் எந்த காலக்கட்டத்திலும் தலை வணங்கியதில்லை. மக்கள் நலனுக்கு எதிராக ஒன்றிய அரசு எடுக்கும் எந்த முடிவுக்கும் தமிழக அரசு பணியாது. வானம் பார்த்த பூமியாக இருந்தாலும் மானம் காக்கும் நாடு எங்கள் தமிழ்நாடு. இவ்வாறு அவர் பேசினார்.
* இடறி விழுவார்கள் என எதிர்பார்த்தனர்
தமிழ்நாட்டில் பள்ளி செல்லும் குழந்தைகள் பசியால் அழக்கூடாது என்பதற்காக நமது முதல்வர் காலை உணவு திட்டத்தை வழங்கி இருக்கிறார். இந்த திட்டத்தை, இந்தியாவில் பல மாநிலங்கள் மட்டுமல்ல உலகமே இதை பின்பற்றும் நிலையில் உள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையில் 2 முறை இந்த திட்டத்தை அறிவித்தும், கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்ற முடியாததை இன்று நமது முதல்வர் நிறைவேற்றி தந்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்தினோம். இதை நிறைவேற்ற முடியுமா, எப்படியும் இடறி விழுவார்கள் என்று சிலர் எதிர்ப்பார்த்தனர். ஆனால் இன்று வெற்றிகரமாக தமிழகத்தில் 1.15 கோடி மகளிர் இந்த திட்டத்தால் பயன் பெறுகிறார்கள். சரியாக 15ம் தேதி அவர்களின் வங்கி கணக்கிற்கு இந்த பணம் சென்றுவிடுகிறது. இந்த திட்டம் முதல்வருக்கு பாராட்டை பெற்று தந்து இருக்கிறது.
இந்தியாவில் இதே போன்ற திட்டத்தை மேற்குவங்காளம், மத்தியபிரதேசம், கர்நாடகா, மாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறார்கள். ஆனால் மகாராஷ்டிராவில் தேர்தல் முடிந்து பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டத்தில் பயன்பெற்ற 15 லட்சம் பயனாளிகளை நீக்கி உள்ளனர். ஆனால் தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை மட்டுமல்ல கலைஞர் கனவு இல்லம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், விடியல் பயணம் என பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய பிறகும்கூட இன்றைக்கு வருவாய் பற்றாக்குறையை ரூ.68 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.41 ஆயிரம் கோடியாக குறைத்திருக்கிறோம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
The post மக்கள் நலனுக்கு எதிரான ஒன்றிய அரசின் முடிவுக்கு தமிழக அரசு பணியாது வானம் பார்த்த பூமியாக இருந்தாலும் மானம் காக்கும் நாடு எங்கள் தமிழ்நாடு: நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சூளுரை appeared first on Dinakaran.