கோவை: காடு என்பது பல்லுயிர்கள் வாழும் சூழல் மண்டலமாக விளங்குகிறது. அவை சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், உயிரியினங்கள் வாழ்வதற்கான நல்ல நீர், காற்று, உணவு உள்ளிட்டவற்றை தருவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில் காடுகள் அழிவதால் ஏற்படும் பாதிப்புகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 21ம் தேதி உலக காடுகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தலைமை வனப்பாதுகாவலரும், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநருமான வெங்கடேஷ் கூறியதாவது: தமிழ்நாட்டில் சுமார் 22,877 சதுர கி.மீ. பரப்பளவு காடு உள்ளது. இது தமிழ்நாட்டின் நிலப்பரப்பளவில் 17.59 சதவீதம். தேசிய வனக்கொள்கையின்படி மாநிலங்கள் தங்கள் நிலப்பரப்பில் 33.33 சதவீதத்தை காடுகளாக கொண்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் வெப்ப மண்டல பசுமை மாறாக்காடுகள், வெப்ப மண்டல அகன்ற இலைக் காடுகள், முட்புதர் காடுகள், சதுப்பு நிலக்காடுகள், இலையுதிர் காடுகள் ஆகிய 5 வகை காடுகள் உள்ளன. பெருகி வரும் மக்கள் தொகையினால் அடிப்படை தேவைகளுக்காக காடுகள் மெதுவாக அளிக்கப்பட்டு வருகிறது.
ஒரு காடு அழியும்போது வெறும் மரங்கள் மட்டும் அழிவதில்லை. அங்கிருக்கும் தாவரங்கள், மூலிகைகள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புழுக்கள், எண்ணற்ற நுண்ணுயிர்கள் ஆகியவையும் அழிய வாய்ப்புள்ளது. காடுகள் அழிக்கப்படுவதால் தட்ப வெப்பநிலை மாறுகிறது. இன்று நம் வீட்டில் பயன்படுத்தப்படும் அழகு பொருட்கள், மேசை, நாற்காலி, வாசற்கதவு, புத்தகம், பென்சில், காகிதங்கள் என பெரும்பாலனவை மரங்களில் உருவானவையே. எல்லாவற்றிற்கும் மேலாக காட்டில் உள்ள மரங்கள் நமக்கு தேவையற்ற கார்பன்-டை-ஆக்சைடை உள்வாங்கி கொண்டு, நாம் உயிர் வாழ தேவையான ஆக்சிஜனை அளிக்கிறது. இந்த நிகழ்வினை மனிதனால் செயற்கையாக உற்பத்தி செய்ய இயலாது. நன்கு வளர்ந்த இலைகளை கொண்ட ஒரு மரம், ஓராண்டுக்கு 40 மனிதர்கள் சுவாசிக்க தேவையான பிராண வாயுவை தருகிறது. காடுகள் உலகின் தட்பவெப்ப நிலையை சமப்படுத்த உதவுகின்றன.
இவ்வாறு காடுகள் உலகிற்கு நுரையீரல்களாக செயல்படுகின்றன. காற்றிலிருக்கும் பல்வேறு கரியமில வாயுக்களை கிரகித்து கொள்ளும் ஆற்றல் பெற்றவை காடுகள் என்பதால், வளி மண்டலம் சுத்தம் செய்யப்படுகிறது. இவை மேகங்களை திரட்டி, குளிர்ச்சியூட்டி மழை பொழிய வைக்கின்றன. எனவே காடுகள் அழிக்கப்பட்டால் மழை இல்லாமலும், மழையின் அளவு குறைந்து போகும். பெய்யும் மழைநீரை சேமித்து வைக்கும் வங்கிகளாகவும் காடுகள் செயல்படுகின்றன. மரங்களே இல்லாத சாதாரண நிலப்பரப்பில் மழை பெய்யும்போது மழை நீரில் மூன்று விழுக்காடே பூமியினுள் உறிஞ்சப்படுகிறது. மீதமுள்ள 97 விழுக்காடு நீர் உடனடியாக ஓடி விடுகிறது. ஆனால் காடுகளில் பெய்யும் மழை நீரில் 33 விழுக்காடு உள்ளிழுக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. மண் அரிப்பு, மண் படிதல், நிலநடுக்கம், நிலச்சரிவு, புழுதிப்புயல் போன்றவை ஏற்படாதிருக்க காடுகள் பெரிதும் பயன்படுகின்றன.
காடுகளால் உயிரியல் பன்மை வளம் பாதுகாக்கப்படுகிறது. காடுகளில் அரிய மூலிகைகள் கிடைக்கின்றன. விலங்குகள், பறவைகள் ஆகியவற்றிற்கு புகலிடமாக விளங்குகிறது. காட்டில் ஒரு தாவரம் அழிக்கப்பட்டால் அதை நம்பி வாழும் நாலுவகை உயிரினங்களின் அழிவுக்கு காரணமாக அமைந்துவிடும். 2025ம் ஆண்டு சர்வதேச காடுகள் தினத்திற்கான கருப்பொருள் ‘காடுகள் மற்றும் உணவு’. உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரங்களில் காடுகளின் பங்கை எடுத்துக்காட்டுவதற்காக இந்த கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. எனவே காடுகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. தற்போது காட்டிற்குள் ஊடுருவி வரும் அந்நிய களை தாவரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காடுகளில் இருக்கும் வனவிலங்குகளை பாதுகாக்க வேட்டைத் தடுப்பு காவலர்களை பயன்படுத்தப்பட்டு வேட்டைகள் தடுக்கப்பட்டு வருகிறது. காட்டைவிட்டு வெளியே வரும் வனவிலங்குகளால் மனிதர்களுக்கு ஏற்படும் முரண்பாடுகளை தடுப்பதற்கும் மற்றும் அவ்வாறு ஏற்படும் சேதாரங்களுக்கு உடனடியாக நிவாரண நிதியும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post இன்று உலக காடுகள் தினம்: 5 வகை காடுகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு கடும் முயற்சி appeared first on Dinakaran.