இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு நேரக்கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது: தமிழக அரசு விளக்கம்


சென்னை: இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு நேரக்கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது என சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்த கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகளை வகுத்து பிப்ரவரி 14ஆம் தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது. அதில், ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கியதையும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 வரை விளையாட யாரையும் அனுமதிக்கக்கூடாது என்ற நேரக்கட்டுப்பாட்டை எதிர்த்து பிளே கேம் பிரைவேட் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தான் தற்போது தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் அரவிந்த் ஸ்ரீவட்சன் பதில்மனு தாக்கல் செய்துள்ளார். அதில் ஆன்லைன் விளையாட்டில் ஏற்பட்ட பணம் நஷ்டம் காரணமாக 2019-2024ம் வரை தமிழகத்தில் 47 பேர் தற்கொலை செய்துள்ளனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவே ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும். ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்காக கொண்டுவரப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் விளையாட்டுக்களால் தூக்கமின்மை பாதிப்பு உடல்ரீதியாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதா இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு தான் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான நேர கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டதாகவும் பதில் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறுவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலேயே ஆதார் கட்டாயமாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதாரங்களை வைத்து சரிபார்க்கும் நடைமுறை கடந்த 8 ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பதாகவும் இதனால் அந்தரங்க உரிமைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலவியல் நிபுணர்களின் ஆலோசனைபடியும் , அறிவியல் ரீதியான தரவுகள், ஆய்வுகள் அடிப்படையிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் இதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணைக்காக மார்ச் 27ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

 

The post இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு நேரக்கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது: தமிழக அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: