அரியலூர்: அரியலூர் நீதிமன்றத்தில் ஒரே நாளில் இரண்டு வழக்குகளில் 12 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டது. அரியலூர் மாவட்டம் இலைக்கடம்பூரை சேர்ந்தவர் கந்தசாமி(60). இவரது மகன் கலைமணி(25). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த ரவிச்சந்திரனுக்கும்(56) சாக்கடை வாய்க்கால் சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்தது. கடந்த 2020ம் ஆண்டு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், அவரது மகன் அரவிந்தன்(32), ரவிச்சந்திரன் தம்பி சேகர் மனைவி வளர்மதி(50), அவரது மகன்கள் அகிலன்(26), கபிலன்(25), பவித்ரன்(23), ரவிச்சந்திரன் தங்கை கலா(45), இவரது கணவர் குருசாமி(52) ஆகிய 8 பேர் கலைமணியை தாக்கினர். அப்போது, கலைமணியின் தந்தை கந்தசாமி, தனது மகனை வீட்டிக்குள் வைத்து பூட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கந்தசாமியை தாக்கினர். இதில் கந்தசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து 8 பேரையும் கைது செய்தனர். அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் நீதிபதி மலர்வாலண்டினா நேற்று தீர்ப்பு கூறினார். குற்றம்சாட்டப்பட்ட ரவிச்சந்திரன் உள்பட 8 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மற்றொரு வழக்கு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் செந்தில்குமாரவேலு(32). இவருக்கும், இணையதளம் மூலம் தேர்வு செய்த அரியலூர் அண்ணா நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகள் கனகவள்ளிக்கும் கடந்த 5.2.2018ல் திருமணம் நடைபெற்றது. அப்போது, 25 பவுன், ரூ.5லட்சம் ரொக்கம், சீர்வரிசை பொருட்களை கனகவள்ளிக்கு கொடுத்தனர். மேலும் 10 பவுன் நகை, பைக் கேட்டதால் பின்னர் தருவதாக ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதையடுத்து சென்னையில் தம்பதி வசித்து வந்தனர். திருமணமான ஓரிரு மாதங்களில் நகை, பணம் கேட்டு செந்தில்குமாரவேலு, அவரது தாய் கலாவதி(61), தம்பி ஹரிகிருஷ்ணவேலு(30) மற்றும் உறவினர் முருகன்(51) ஆகியோர் கனகவள்ளியை துன்புறுத்தி உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 12.5.2018 அன்று ராஜேந்திரன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து நகை, பணம் வாங்கிவர சொல்லி கனகவள்ளியை அரியலூருக்கே அனுப்பி விட்டனர். இந்நிலையில் கடந்த 13.6.2018ல் தந்தை மற்றும் தனது இறப்புக்கு செந்தில்குமாரவேலு உட்பட 4 பேர் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு, அரியலூரில் உள்ள தனது தந்தை வீட்டில் கனகவள்ளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பான புகாரின் பேரில் செந்தில்குமாரவேலு உள்பட 4 பேரையும் அரியலூர் போலீசார் கைது செய்தனர். அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் நீதிபதி செல்வம் நேற்று தீர்ப்பளித்தார். தற்கொலைக்கு தூண்டியதாக கூறி செந்தில்குமாரவேலு, அவரது தாய் கலாவதி, தம்பி ஹரிகிருஷ்ணவேலு, உறவினர் முருகன் ஆகியோருக்கு ஆயுள்தண்டனை விதித்து உத்தரவிட்டார். 2 வழக்குகளிலும் ஆயுள் தண்டனை பெற்ற 12 பேரும் பலத்த பாதுகாப்புடன் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
தற்கொலைக்கு முயன்ற பெண்
கந்தசாமி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கலா நீதிமன்ற வளாகத்தில் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் தனது கழுத்தில் துண்டை சுற்றிக்கொண்டு இறுக்கி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை மீட்டனர்.
The post அரியலூர் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 12 பேருக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.