உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாம் போக நெல் அறுவடை பணிகள் ‘ஸ்பீடு’

*நெல்லுக்கு விலை கிடைக்காததால் வேதனை

உத்தமபாளையம் : கம்பம் பள்ளத்தாக்கு பகுதி என அழைக்கப்படும் கூடலூர், கம்பம், சுருளிபட்டி, நாராயண தேவன்பட்டி, உத்தமபாளையம், சின்னமனூர், குச்சனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 14,707 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.

தற்போது உத்தமபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் முதல் போக அறுவடைகள் முடிந்து, இரண்டாம் போக நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பெரியாறு அணையின் நீரினை கொண்டு இருபோக நெல் விவசாயத்தை செய்து விவசாயிகளுக்கு முதல் போகத்தை விட இரண்டாம் போக அறுவடை செய்யப்படக்கூடிய நெல்லுக்கு விலை இல்லை என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

முதல் போக அறுவடையில் ரூ.1600 முதல் ரூ.1800 வரை விலை கிடைத்தது. தற்போது மூட்டை ரூ.1200 முதல் ரூ.1300 வரை கிடைக்கிறது. இந்த விலையால், செலவு செய்த பணம் கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நெல் மருந்து மற்றும் கூலி ஆட்கள் சம்பளம், வண்டி வாடகை, அறுவடை செய்யப்படும் வண்டி என மொத்த செலவு தற்பொழுது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் நெல் கொள்முதல் விலை உயர்த்தி அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு நெல் கொள்முதலுக்கு விலை நிர்ணயம் செய்து கொடுத்தால் மட்டுமே இந்த இரண்டாம் போக அறுவடையில் போட்ட முதலாவது கிடைக்கும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நடவு செய்த என்ஆர், என்ஆர்1 பயிர்களை தற்பொழுது அறுவடை செய்து வருகின்றனர்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு மூட்டை ரூ.1600, ரூ.1700, ரூ.1800 முதல் விலை போனது. ஆனால் தற்பொழுது முதல் போகத்தை விட ரூ.400 ரூபாய் குறைந்து உள்ளது. எனவே அறுவடை செய்யப்பட்ட நெல்லுக்கு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், இந்த விஷயத்தில் தமிழக முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாம் போக நெல் அறுவடை பணிகள் ‘ஸ்பீடு’ appeared first on Dinakaran.

Related Stories: