கல்வராயன்மலையில் கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்திய 30 பேருக்கு கறவைமாடுகள்

*ஆட்சியர் பிரசாந்த் வழங்கினார்

கல்வராயன்மலை : கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களுக்கு சுயதொழில் செய்யும் வகையில் கால்நடைத்துறையின் மூலம் 100 சதவீதம் மானியத்தில் உயர்ரக கறவைமாடுகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வழங்கினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

கல்வராயன்மலைப் பகுதி மக்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசின் உத்தரவின்படி கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கல்வராயன்மலைப் பகுதி பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக அரசின் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து துறைவாரியாக நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நலத்திட்டங்கள் பயனாளிகளைத் தொடர்ந்து சென்றடைவதை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இப்பகுதி பொதுமக்கள் பல்வேறு சுயதொழில்கள் செய்து முன்னேறும் வகையிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் கல்வராயன்மலை வட்டம், தாழ்வெள்ளார் கிராமத்தில் கள்ளச்சாராயத் தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களுக்கு சுயதொழில் செய்யும் வகையில் கால்நடைத்துறையின் மூலம் உயர்ரக கறவைமாடுகள் வழங்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத் தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களுக்கு மறுவாழ்வு நிதி உதவித்தொகை திட்டத்தின்கீழ் அவர்கள் சுயதொழில் செய்ய மாவட்ட நிர்வாகத்தால் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி மதுவிலக்கு தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்தி வாழும் நபர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தும் வகையில் கால்நடைத்துறையின் சார்பில் ஒரு நபருக்கு ரூ.50,000 வீதம் 30 நபர்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 100 சதவீதம் மானியத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.

இதில் வெள்ளிமலையில் 8 பேர், தொரடிப்பட்டில் 14 பேர், சேராப்பட்டில் 8 பேர் என மொத்தம் 30 பேருக்கு உயர்ரக கறவைமாடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இவர்கள் சுயதொழில் செய்து வாழ்வில் முன்னேற வழிவகை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் இதுபோன்ற நடவடிக்கையின் மூலம் கல்வராயன்மலை மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தனிக்கவனம் செலுத்தி வருகிறது என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்தார்.

இதில் வருவாய் வட்டாட்சியர் கோவிந்தராஜ், துணை வட்டாட்சியர் அந்தோணிராஜ், வருவாய் ஆய்வாளர் பெரியசாமி, கிராமநிர்வாக அலுவலர் செந்தில்நாதன், கிராம உதவியாளர் பிரபாகரன், வெள்ளிமலை கால்நடை மருத்துவர் கவிதா, தொரடிப்பட்டி கால்நடை மருத்துவர் நிறைமொழி, துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

The post கல்வராயன்மலையில் கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்திய 30 பேருக்கு கறவைமாடுகள் appeared first on Dinakaran.

Related Stories: