விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நேற்று பாம்பாறு அணையிலிருந்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார்.
அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பாம்பாறு அணை 1983ம் ஆண்டு கட்டப்பட்டது. பாம்பாறு அணையின் முழு நீர்மட்ட உயரம் 19.68 அடி. பாம்பாறு அணையில் இருந்து 2024- 2025ம் ஆண்டு ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு, பாசனத்திற்காக 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதன்மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகாவில் உள்ள மிட்டப்பள்ளி, ஓபகாவலசை, போத்தராஜன்பட்டி, மூன்றம்பட்டி, கொட்டுகாரம்பட்டி, கரியபெருமாள் வலசை, புளியம்பட்டி, எட்டிப்பட்டி, பாவக்கல், நல்லவம்பட்டி, நடுப்பட்டி, குப்பநத்தம் ஆகிய 12 கிராமங்களில் 2,501 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன.
அதேபோல், தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகாவில் தா.அம்மாப்பேட்டை, வேடக்கட்டமடுவு, மேல்செங்கம்பாடி மற்றும் ஆண்டியூர் ஆகிய 4 கிராமங்களில் உள்ள 1,499 ஏக்கர் என மொத்தம் 16 கிராமங்களிலுள்ள 4,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
பொதுப்பணித்துறையினருக்கு ஒத்துழைப்பு தந்து, நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
தொடர்ந்து பாம்பாறு அணையில் பெஞ்சல் புயல் மழையின்போது பாதிக்கப்பட்ட மதகுகள் சீரமைக்கப்பட்டுள்ளதையும், அணையிலிருந்து திறந்து விடப்படும் நீர் செல்லும் பாதைகளை நீர்வளத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பாவக்கல் கிராமம், சுப்பையன் ஏரிக்கு செல்லும் வாய்க்காயை பார்வையிட்ட கலெக்டர், அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக வேளாண்மைத்துறை சார்பில், 11 பேருக்கு ரூ.2 லட்சத்து 91 ஆயிரத்து 625 மதிப்பிலான வேளாண்மை இடுபொருட்களை கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், நீர்வளத்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பச்சையப்பன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி பொறியாளர் ஜெயக்குமார், ஊத்தங்கரை தாசில்தார் திருமால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலாஜி, தவமணி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் உஷாராணி குமரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post பாம்பாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 4 ஆயிரம் ஏக்கர் நிலம் பயன்பெறும் appeared first on Dinakaran.