பாலின விகிதாச்சாரத்தை களைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

*அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் பாலின விகிதம் குறைவாக இருப்பதால் அனைத்து மருத்துவ ஊழியர்கள் இணைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென கலெக்டர் கேட்டுக் கொண்டார்.தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் அடங்கிய சுகாதாரத்துறை மருத்துவர்களுடனான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சதீஸ் தலைமை வகித்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவல்லி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி, மாவட்ட சுகாதார அலுவலர் (பொ) சவுண்டம்மாள், அனைத்து அரசு மருத்துவ அலுவலர்கள், துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (குடும்பநலம், காசநோய், தொழுநோய்), மாவட்ட சுகாதார அலுவலர், அரசுத்துறை அலுவலர்கள், 108 ஆம்புலன்ஸ் மேலாளர், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அலுவலர், மாவட்ட மனநல திட்ட மனநல அலுவலர், மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்க அலுவலர் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இக்கூட்டத்தில் துறை சார்ந்த செயல்பாடுகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் பேசினர்.

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது: தமிழக அரசின் மூலம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மக்களைத்தேடி மருத்துவம், முதல்வர் மருந்தகம், இன்னுயிர் காப்போம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது.

மேலும், மருத்துவம் சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளும், சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு அளிக்கப்பட்டு, நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வண்ணம் பணிபுரியவேண்டும்.

கிராம சுகாதார செவிலியர்கள் நோயாளிகளை தொடர்ந்து கண்காணிப்பில் வைத்து அவர்களின் நலனை பேணி காக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் பாலின விகிதம் மிகவும் குறைவாக இருப்பதாலும், இளம் வயது கர்ப்பம், இளம் வயது திருமணம் இவையாவும் அதிகமாக இருப்பதை குறித்து அனைத்து மருத்துவ ஊழியர்கள் இணைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் 1000 ஆண் குழந்தைக்கு 925 பெண் குழந்தைகள் என்ற பிறப்பு விகிதம் உள்ளது. இந்த விகிதச்சாரத்தை உயர்த்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

தர்மபுரி மாவட்ட பொதுமக்களிடையே குடும்ப கட்டுப்பாட்டின் அவசியத்தை தெரியப்படுத்தும் வகையில், தற்காலிக கருத்தடை சிகிச்சைகள் மற்றும் சிகிச்சை முறைகள் மேற்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். தொழுநோய் ஒழிப்பு, காசநோய் ஒழிப்பு, பாலின விகிதம், மகப்பேறு இறப்பு குறித்து வரும் 29ம்தேதி நடக்கும் கிராம சபை கூட்டத்தில் துறை தலைவர்கள் கலந்துக்கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.

மேலும், அரசு மருத்துவமனைகள் சிறந்த முறையில் செயல்பட்டு பொதுமக்களிடையே நற்பெயர் பெறவேண்டும். ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் செயல்படவும், மருத்துவமனை வளாகத்தினை தூய்மையாக பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உடல் உறுப்பு தானத்தில் மாநில அளவில் 2வது இடத்தில் உள்ளதற்காகவும், பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தரச்சான்றிதழ்களைப் பெற்றமைக்காகவும், குடும்பநல அறுவை சிகிச்சையில் தர்மபுரி மாவட்டம் 2வது இடத்தில் உள்ளதற்காகவும், சுகாதாரத்துறையினரை கலெக்டர் பாராட்டினார்.

The post பாலின விகிதாச்சாரத்தை களைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: