* போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
* தொடர்ந்து வைப்பவர்கள் மீது வழக்கு பாயும்
விழுப்புரம் : விழுப்புரம் நகரில் சாலையோரம் வைக்கப்பட்ட பேனர்களை போக்குவரத்து போலீசார் அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர்.விழுப்புரம் நகரில் சாலையோரம் பேனர்கள் வைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் பேனர்கள் வைக்க நீதிமன்ற உத்தரவுகளை கடைபிடிக்கவும் காவல்துறை அறிவுறுத்தியிருந்தது.
அதன்படி விழுப்புரம் நகரில் கடந்த சில நாட்களாக அனுமதியின்றி சாலையோரம் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்ட வண்ணம் உள்ளது. மேலும் கடந்தவாரம் பழைய பேருந்துநிலையத்தில் சாலையோரம் வைக்கப்பட்ட பேனர் காற்றில் பறந்து வாலிபர் ஒருவர்மீது விழுந்து காயமடைந்தார்.
இதனைதொடர்ந்து விழுப்புரம் நகரம்முழுவதும் சாலையோரம் வைக்கப்பட்ட பேனர்களை அகற்றிட எஸ்பி சரவணன் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று போக்குவரத்து காவல்நிலைய எஸ்ஐ குமாரராஜா தலைமையிலான போலீசார் ரெக்கவரிவாகனம் மூலம் சிக்னல் பகுதியிலிருந்து புதிய பேருந்துநிலையம் வரை சாலையோரம் வைக்கப்பட்ட பேனர்களை அகற்றினர். சுமார் 20க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன.
தொடர்ந்துஇன்று காமராஜர் சாலை உள்ளிட்ட பிரதான சாலை பகுதிகளில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்றுகின்றனர். தொடர்ந்து பேனர்கள் வைப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்றும், எனவே சாலையோரம் யாரும் பேனர்கள் வைக்கக்கூடாது என போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.
The post விழுப்புரம் நகரில் சாலையோரம் வைக்கப்பட்ட பேனர்கள் அதிரடி அகற்றம் appeared first on Dinakaran.