ரூ.1.45 கோடியில் சீரமைப்பு பணி நடக்கிறது மாஷபுரீஸ்வரர் கோயில் குளத்தில் பழமை வாய்ந்த கிணறு கண்டுபிடிப்பு

 

உளுந்தூர்பேட்டை, மார்ச் 21: உளுந்தூர்பேட்டை அருகே மாஷபுரீஸ்வரர் கோயில் குளம் ரூ.1.45 கோடியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி குளத்தில் இருந்த தண்ணீரை வெளியேற்றியபோது குளத்துக்குள் பழமைவாய்ந்த கிணறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உளுந்தாண்டார் கோயில் பகுதியில் பாடல் பெற்ற தலமான லோகாம்பிகை நாயகி சமேத மாஷபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்திபெற்ற இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயில் குளத்தில் உள்ள படிக்கட்டுகள் சிதறுண்டு பராமரிப்பின்றி புதர்சூழ்ந்து கிடந்தது.

இந்த குளத்தினை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் மட்டுமின்றி அந்த பகுதி மக்களும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் மாஷபுரீஸ்வரர் கோயில் குளத்தினை சீரமைக்க ரூ.1 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கோயில் குளத்தை சீரமைப்பதற்கான பூமி பூஜை பணிகளை கடந்த மாதம் உளுந்தூர்பேட்டை மணிக்கண்ணன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.  இந்நிலையில் குளம் சீரமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதற்காக குளத்தில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. தண்ணீர் வெளியேற்றப்பட்ட பின்னர் குளத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமைவாய்ந்த கிணறு இருந்தது தெரியவந்தது. இந்த தகவல் தெரியவந்ததும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வந்து குளத்துக்குள் இருந்த கிணற்றை பார்த்து செல்கின்றனர்.மாஷபுரீஸ்வரர் கோயில் குளத்தை முற்றிலும் தூர்வாருவதுடன் சுற்றியுள்ள படிக்கட்டுகளையும் முழுமையாக சீரமைத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post ரூ.1.45 கோடியில் சீரமைப்பு பணி நடக்கிறது மாஷபுரீஸ்வரர் கோயில் குளத்தில் பழமை வாய்ந்த கிணறு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: