பட்டுக்கோட்டை, மார்ச் 19: பட்டுக்கோட்டையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்பதை முன்னிறுத்தி போதைப் பொருள் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோட்ட கலால்துறை சார்பில் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் நேற்று விழிப்புணர்வு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி போதைப் பொருள் ஒழிப்பு குறித்துபொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பட்டுக்கோட்டை நாடிமுத்துநகர் காந்தி பூங்காவிலிருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பேரணியை பட்டுக்கோட்டை கோட்ட கலால் அலுவலர் தெய்வானை தொடங்கி வைத்தார்.
பேரணி காந்தி பூங்காவிலிருந்து புறப்பட்டு நாடிமுத்துநகர், பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதியில் வழியாக சுற்றிவந்து மீண்டும் காந்தி பூங்காவில் முடிவடைந்தது. பேரணியில் பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், நகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் முருகேசன், மனோதண்டபாணி மற்றும் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், கூட்டுறவு ஐ.டி.ஐ மாணவ, மாணவிகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்பதை வலியுறுத்தும் விதமாக விளம்பர பதாகைகளை தங்களது கைகளில் ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் சென்றனர்.
The post பட்டுக்கோட்டையில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.