அரியலூர் ஊரகப்பகுதிகளில் ‘நமக்கு நாமே’ திட்ட பணிகளுக்கு பொதுமக்களின் பங்கு வரவேற்பு

 

அரியலூர், மார்ச் 19: அரியலூர் மாவட்டத்திலுள்ள ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் ‘நமக்கு நாமே’ திட்ட பணிகளுக்கு பொதுமக்களின் பங்குத் தொகை வரவேற்கப்படுகிறது என்று கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவரது செய்திக்குறிப்பு விவரம்: அரியலூர், செந்துறை, திருமானூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் மற்றும் தா.பழூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊரகப் பகுதிகளில் பொது மக்கள் பங்களிப்புடன் கூடிய நமக்கு நாமே திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுகிறது.

பணிகள் குறித்த விவரங்கள் மற்றும் பணிகளுக்கான பொதுமக்கள் பங்கு தொகை வரவேற்கப்படுகிறது. இதில், பொதுப் பிரிவினர் வசிக்கும் பகுதிகளில், பணிகளின் மதிப்பீடு தொகையில் மூன்றில் ஒரு பங்கு குறையாமல் பொதுமக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும். பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில், பொதுமக்கள் பங்களிப்பானது, பணிகளின் மதிப்பீடு தொகையில் ஐந்தில் ஒரு பங்கு குறையாமல் இருக்க வேண்டும்.

பணிகள் ஊரக பகுதிகளில் மட்டும் செயல்படுத்தப்படும். மேற்சொன்ன நிபந்தனைகளுக்குட்பட்டு பொதுமக்கள் பங்குத்தொகை செலுத்திட விரும்பினால், ஆட்சியர் அலுவலகம், முதல் தளத்திலுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

The post அரியலூர் ஊரகப்பகுதிகளில் ‘நமக்கு நாமே’ திட்ட பணிகளுக்கு பொதுமக்களின் பங்கு வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: