தமிழ்நாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், வனங்களில், அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் மலையேற்றம் செய்ய தமிழ்நாடு மலையேற்ற திட்டம், அதற்கான இணைய தளம் கடந்த மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் 40 மலையேற்ற பாதைகள் திறந்து வைக்கப்பட்டது.
மலையேற்றம் செய்ய விரும்புபவர்கள் www.trektamilnadu.com என்ற வலைதளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவள்ளூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மலையேற்றம் செய்வதற்கான இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் மலையேற்றப் பாதைகள் எளிதான, மிதமான, கடினமானவை என 3 பிரிவுகளாக உள்ளன.
இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு, வனப்பகுதி உள்ளூர் மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும், வன உயிரின பாதுகாப்பிற்கு வலுசேர்க்கும் விதமாக தமிழ்நாடு மலையேற்ற திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மலையேற்ற திட்டத்தில் நபர் ஒருவருக்கு ரூ.599 முதல் ரூ.5,099 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. எளிதான பிரிவு – ரூ.599 முதல் ரூ.1,449, மிதமான பிரிவு – ரூ.1,199 முதல் ரூ.3,549, கடினமான பிரிவு – ரூ.2,799 முதல் ரூ.5,099 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் டிரெக் தமிழ்நாடு’ சுற்றுலாவை அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு பெருமிதம் அடைந்துள்ளார். டிரெக் தமிழ்நாடு என்பது வெறும் சாகசப் பாதையை விட அதிகம். மூன்று மாதங்களில், 4,792 மலையேற்றப் பயணிகள் அதன் மூச்சடைக்கக்கூடிய பாதைகளை ஆராய்ந்து, ரூ. 63.43 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளனர்.
ரூ. 49.51 லட்சம் நேரடியாக பழங்குடி இளைஞர்களுக்குச் சென்றுள்ளது, இது சுற்றுலாவை சமூகங்களுக்கு அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளது. தீ விபத்துக்குப் பிறகு ஏப்ரல் மாதத்தில் பாதைகள் மீண்டும் திறக்கப்படும். மலையேற்றப் பயணிகளை அதன் மயக்கும் இயற்கை அழகில் வரவேற்க தமிழ்நாடு தயாராக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
The post டிரெக் தமிழ்நாடு’ சுற்றுலாவை அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.