பவளப் பாறைகள் என்பவை கடலினுள் பவளம் எனப்படும் ஒரு உயிரினத்தால் சுரக்கப்படும் கால்சியம் கார்பனேட்டினால் உருவாகின்றன. பெரும்பாலும் இவை பூமத்தியரேகைக்கு கீழே உள்ள வெப்ப நாட்டு கடல் பகுதிகளிலும், பசிபிக் பெருங்கடல் பகுதியிலும் காணப்படும். இந்தியாவில், அந்தமான் தீவுகளிலும், லட்சத் தீவுகளை ஓட்டிய கடல் பகுதிகளிலும் இவை காணக்கிடைக்கின்றன. பவளப்பாறைகளில் கண்டத்திட்டுப் பவளப்பாறைகள், தடுப்புப் பவளப்பாறைகள், வட்டப் பவளத்திட்டுகள் என மூன்று வகைகள் உள்ளன.
பசிபிக் பெருங்கடலில் பல அழகான வண்ணங்களில் பவளப்பாறைகள் அமைந்துள்ளன. இவை பச்சை, கருஞ்சிவப்பு, பழுப்பு, மஞ்சள் முதலான நிறங்களில் காணப்படுகின்றன. இவை பல்வேறு கடல் உயிரினங்கள் வாழ்வதற்கான இடமாகவும் இருக்கின்றன. ‘கடல்களின் மழைக்காடுகள்’ என அழைக்கப்படுகின்றன. இவை 25 விதமான கடல் வாழ் உயிரினங்களின் வாழிடமாக உள்ளன. உலகின் அனைத்து சமுத்திரங்களிலும் பவளப்பாறைகள் உருவாவதில்லை. இவை உருவாவதற்கு விசேஷ சுற்றுச்சூழல் அவசியம். அதாவது கடல் நீரின் வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் முதல் 24 டிகிரி செல்சியஸ்க்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும்.
நீரின் ஈரப்பதம் 30 சதவீதத்தில் இருந்து 35 சதவீதம் வரை இருக்க வேண்டும். சூரிய ஒளி கடல் நீரின் ஆழ்பகுதி வரை நன்கு ஊடுருவ வேண்டும். கடல் அலை குறைவாக இருக்க வேண்டும். ஆனால் இந்த சுற்றுச்சூழல்கள் அனைத்து கடல் பகுதிகளிலும் நிலவுவதில்லை. எனவே மீன்வளத்தை மேம்படுத்தவும், பல்லுயிர் சூழலை அதிகரிக்கவும் செயற்கை பவளப்பாறைகள் அமைக்க தமிழக அரசு திட்டம் திட்டமிட்டது. அதன்படி தமிழகத்தில் 90 இடங்களில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்க 28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. கஜா புயல் புனரமைப்பு மறுவாழ்வு மற்றும் மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ், மீன்வளத்தை பெருக்க செயற்கை பவளப்பாறைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பத்தில் தற்போது பல்வேறு வடிவங்களில் செயற்கை பவளப்பாறைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு முக்கோணம் வளையம் மற்றும் வளைய தொகுப்பு ஆகிய வடிவங்களில் செயற்கை பவள பாறைகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் செயற்கை பவளப் பாறைகளில் புதுவை, காரைக்கால் ஆகிய கடல் பகுதியில் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் கூடிய விரைவில் கடலில் இறக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது மட்டுமின்றி இங்கு தயாரிக்கப்படும் செயற்கை பவளப்பாறைகள் மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
நாள் ஒன்றுக்கு ஆட்களின் எண்ணிக்கையை பொறுத்து 50 முதல் 100 பவளப்பாறைகள் வரை தயாரிக்கப்படுகின்றன. இந்த பவளப்பாறைகள் கடலில் இறக்கப்பட்டவுடன் நாளடைவில் அவற்றில் பாசிகள் படர தொடங்கும். இதன் பிறகு மீன்கள் அவற்றை உணவாகக் கொண்டு அங்கு முட்டை இட்டு இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக அமையும். கடலூர் மாவட்டத்தில் சிங்காரத்தோப்பு, அக்கரை கோரி, சோனங்குப்பம், தாழங்குடா, தேவனாம்பட்டினம், சின்னூர், புதுப்பேட்டை அன்னங்கோயில் உள்ளிட்ட 52 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் மீன்பிடி தொழிலையே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் இருந்து தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இதனால் கடலூர் துறைமுகம் மீன்பிடி தளத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி விடும். இங்கு சிறிய வகை மீனான நெத்திலி மீன் முதல் பெரிய வகை மீனான சுறா மீன் வரை கிடைக்கும். இதனால் கடலூர் மாவட்ட கடற்கரை பகுதிகளில் இந்த பவளப்பாறைகள் அத்தியாவசிய தேவையாக கருதப்படுகிறது.
கடலூரில் தயாரிக்கப்படும் செயற்கை பவள பாறைகள் கடலில் இறக்கப்படும் பட்சத்தில் மீன்வளம் பெருகி, கடல்வாழ் உயிரினங்களுக்கு வாழ்விடங்கள் கிடைக்கும். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரமும் மேம்படும் சூழல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
* தொலைநோக்கு திட்டம் மீனவர்கள் வரவேற்பு
தமிழ்நாடு மீனவர்கள் பேரவை கடலூர் மாவட்ட தலைவர் சுப்புராயன் கூறும்போது, ‘ஆழ் கடலில் இருந்த செயற்கை பவள பாறைகள் தற்போது அழிந்து வருகின்றன. இதனால் மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசு செயற்கை பவளப்பாறைகளை கடலில் இறக்க திட்டம் தீட்டியுள்ளது. இது தொலைநோக்கு திட்டமாகும். இதனால் மீன்வளம் பாதுகாக்கப்படும். மீன்களின் இனப்பெருக்கமும் அதிகரிக்கும். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும். இந்த திட்டத்தை நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம்’ என்றார்.
The post மீன்வளத்தை மேம்படுத்தவும், பல்லுயிர் சூழலை அதிகரிக்கவும் கடலூரில் தயாராகும் செயற்கை பவள பாறைகள்: பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது appeared first on Dinakaran.