இந்த உத்தேச பட்டியலில், 3 பிரிவாக நாடுகள் பிரிக்கப்பட்டுள்ளன. சிவப்பு பிரிவில் ஆப்கானிஸ்தான் பூடான், வடகொரியா, ஈரான், ஏமன், சூடான் உள்ளிட்ட 11 நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் இருந்து யாருமே அமெரிக்காவிற்கு வர முடியாது. அடுத்ததாக ஆரஞ்ச் பட்டியலில் பாகிஸ்தான், ரஷ்யா, மியான்மர் உள்ளிட்ட 10 நாடுகள் உள்ளன. இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். கோடீஸ்வர தொழிலதிபர்கள் அமெரிக்கா வர எளிதில் அனுமதிக்கப்படுவார்கள். அதுவே குடியேற்றம் அல்லது சுற்றுலா விசா வழங்கப்படாது. இந்த நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் விசா இன்டர்வியூவில் கட்டாயம் நேரில் வந்து கலந்து கொள்ள வேண்டும். எனவே இப்பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து யாரும் அவ்வளவு எளிதில் அமெரிக்காவுக்கு சென்று விட முடியாது.
மூன்றாவதாக மஞ்சள் பட்டியலில் பெரும்பாலும் ஆப்ரிக்க நாடுகள் உள்ளன. மொத்தம் 22 நாடுகள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த நாடுகள் 60 நாளில் அமெரிக்காவின் சில சட்ட விதிகளுக்கு இணங்க வேண்டும். அதாவது, அமெரிக்கா வரும் பயணிகளின் விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும், பாஸ்போர்ட் வழங்குவதில் உள்ள பாதுகாப்பு நடைமுறைகள், தடை செய்யப்பட்ட நாடுகளை சேர்ந்த மக்கள் குடியுரிமை பெற்று அதன் மூலம் அமெரிக்காவில் குறுக்கு வழியில் நுழைவதை தடுத்தல் போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், ஆரஞ்ச் அல்லது சிவப்பு பட்டியலுக்கு மாற்றப்படும். இந்த தகவல் உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* தாய்லாந்து அதிகாரிகளுக்கு தடை
சீனாவில் உய்குர் மக்கள் பல்வேறு சித்ரவதை மற்றும் இன அழிப்புக்கு ஆளாக்கப்பட்டு வரும் நிலையில், தப்பி வந்த 40க்கும் மேற்பட்ட உய்குர் முஸ்லிம்களை சீனாவுக்கு நாடு கடத்திய தாய்லாந்து அரசு அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. அதிகாரிகள் குறித்த விவரங்கள் வெளியிடாத அமெரிக்கா அவர்கள் தங்கள் நாட்டிற்கு வர தடை விதித்துள்ளது. இதே போல, மாணவர்கள் பரிமாற்ற திட்டத்தின் அடிப்படையில், அமெரிக்காவிற்கு சீன மாணவர்கள் வர தடை விதிக்கக் கோரி ரெய்லி மோரே தலைமையில் குடியரசு கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார். சீனா தனது மாணவர்கள் மூலமாக அமெரிக்க ராணுவத்தை உளவு பார்ப்பதாகவும், அறிவுசார் சொத்துக்களை திருடி நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற வாய்ப்பில்லை என்றாலும், டிரம்ப் நிர்வாகத்தின் சீனா எதிர்ப்பை பிரதிபலிப்பதாக உள்ளது.
* ஏற்கனவே தடுத்த நீதிமன்றம்
டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்திலேயே இதுபோன்ற பயண தடை உத்தரவை கொண்டு வந்தார். ஆனால் அப்போது பெரும்பாலும் முஸ்லிம் நாடுகளுக்கு மட்டுமே பயண தடை விதிக்கப்பட்டிருந்ததால் சர்ச்சையானது. பல வழக்குகள் தொடரப்பட்டதால் அமெரிக்க நீதிமன்றங்கள் மூலம் அந்த உத்தரவு அமல்படுத்தப்படாமல் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post அதிபர் டிரம்ப் நிர்வாகம் அடுத்த அதிரடி பாகிஸ்தான் உட்பட 43 நாடுகளுக்கு பயண தடை விதிக்கும் அமெரிக்கா: ஆப்கானியர்கள் நுழையவே முடியாது appeared first on Dinakaran.