சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: ஆஸியை பந்தாடி அபார வெற்றி: இறுதியில் இந்தியா

ராய்ப்பூர்: சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் அரை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியை இந்தியா, 94 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் போட்டியில் 8 அணிகள் மோதின. லீக் சுற்றுகள் அடிப்படையில் அரை இறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் ராய்ப்பூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த போட்டியில் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் துவக்க வீரர் ராயுடு 5 ரன்னில் அவுட்டானார்.

மற்றொரு துவக்க வீரர் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் அற்புதமாக ஆடி 30 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 42 ரன் விளாசினார். பின் வந்தோரில் யுவராஜ் சிங், ஆஸி வீரர்களின் பந்துகளை துவம்சம் செய்து அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். 30 பந்துகளை சந்தித்த அவர், 7 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 59 ரன் குவித்தார். ஸ்டூவர்ட் பின்னி 36, யூசப் பதான் 23, இர்பான் பதான் 19 ரன் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 220 ரன் குவித்தது.

அதையடுத்து, 221 ரன் இமாலய வெற்றி இலக்குடன் ஆஸி களமிறங்கியது. துவக்க வீரரும் கேப்டனுமான ஷேன் வாட்சன், 5 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். பின் வந்த வீரர்களில் ஷான் மார்ஷ், பென் டங்க், நாதன் ரியர்டன் தலா 21 ரன், பென் கட்டிங் 39 ரன் எடுத்தனர். 18.1 ஓவர் முடிவில் ஆஸி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன் மட்டுமே எடுத்தது.

அதனால், 94 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்திய பந்து வீச்சாளர்களில் ஷாபாஸ் நதீம் 4, இர்பான் பதான், வினய் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இலங்கை – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடக்கும் மற்றொரு அரை இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் இந்தியா, நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் மோதும்.

The post சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: ஆஸியை பந்தாடி அபார வெற்றி: இறுதியில் இந்தியா appeared first on Dinakaran.

Related Stories: