* உலக தமிழ் ஒலிம்பியாட் போட்டி: ‘‘தமிழின் பெருமை மற்றும் சிறப்பை உலகத் தமிழ் இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பிற நகரங்களில் உள்ள பள்ளிகளிலும், உலகத் தமிழ் மையங்களிலும் பயிலும் மாணவர்களுக்கு கணினி வழி உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ. 1 கோடி வழங்கப்படும்” என்றும் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
* தொல்லியல் துறைக்கான நிதி
வரும் நிதி ஆண்டில் தொல்லியல் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ரூ. 7 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், ‘‘தென்கிழக்கு ஆசியா, மத்தியத் தரைக்கடல், அரேபிய தீபகற்பம், ரோமப் பேரரசு பகுதிகளுடன் வைத்துக்கொண்ட கடல் வழி வணிகம் தொடர்பாக ஆழ்கடல் அகழ்வாய்வுகளை தமிழ்நாடு கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதல்கட்டமாக இந்த ஆண்டு தொல்லியல் ஆய்வாளர்களின் அறிவுரைப்படி காவிரிப்பூம்பட்டினம் முதல் நாகப்பட்டினம் வரை ஆழ்கடல் அகழ்வாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்று அறிவித்தார். ஐம்பொன்னால் ஆன இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செப்புத் திருமேனிகள் எழும்பூர் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன. அதன் சிறப்பை வெளிநாட்டினரும் ரசிக்கும் வகையில், மரபுசார் கட்டட அமைப்பில் தனியாக காட்சி அரங்கம் ஒன்று எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைக்க ரு. 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* நகராட்சி நிர்வாகம்
கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள பணிகளுக்காக ரூ. 2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 6483 கி.மீ. நீளமுள்ள சாலைகளை ரூ. 3750 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் கடும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் ஒரு பகுதியாக வேளச்சேரி மற்றும் கிண்டியில் வசிக்கும் 7 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வேளச்சேரி பிரதான சாலை துவங்கி, குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 3 கி.மீ. நீளத்திற்கு ரூ. 310 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்படும்.
ரயில்வே துறையுடன் இணைந்து கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம் ரூ. 70 கோடி மதிப்பில் கட்டப்படும். கொடுங்கையூர் குப்பைக் கொட்டும் வளாகத்தில் உயிரி எரிவாயு நிலையம் – ரூ. 3450 கோடி சென்னை பெருநகர மாநகராட்சியின் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் உயிரி எரிவாயு நிலையம், இயற்கை உரம் தயாரிக்கும் நிலையம், தானியங்கி பொருள் மீட்பு மையம் மற்றும் 21 மெகாவாட் திறன் கொண்ட திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணிக்காக ரூ. 3450 கோடி திட்டக் காலத்திற்கான மதிப்பீட்டில் தொடங்கப்படும்.
விடியல் பயணம் என்பது கீழ் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அறிமுகம் செய்யப்பட்ட திட்டமாகும். அந்த ஆண்டு அத்திட்டத்திற்கான மானியத் தொகை ரூ. 3600 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நிதியாண்டில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 37 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், ஈரோடு, கரூர் மற்றும் இராணிப்பேட்டை உள்ளிட்ட 10 இடங்களில் புதிதாக தோழி மகளிர் விடுதிகள் கட்ட ரூ. 77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களிடையே அறிவியல் சிந்தனையை வளர்த்திடவும், இளைய தலைமுறையினருக்கு புதிய தொழில்நுட்ப வசதிகளைத் தொடர்ந்து அறிமுகம் செய்திடும் நோக்கோடு, சிங்கப்பூர் அறிவியல் மையத்துடன் இணைந்து நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட சென்னை அறிவியல் மையம் உருவாக்கப்படும். இதில் அனைத்து வசதிகளுடன் கூடிய பிரமாண்ட முறையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் அரசு பங்களிப்புடன் உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோவையில் இரண்டு அடிப்படை அறிவியல் மற்றும் கணித ஆராய்ச்சி மையங்களை இந்திய அறிவியல் நிறுவனம், டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் போன்ற நாட்டின் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கிட ரூ.100 கோடி நிதி வழங்கப்படும். புகழ்பெற்ற அறிவியல் அறிஞர்களின் வழிகாட்டுதலுடன் முனைவர் மற்றும் முதுமுனைவர் பட்டப்படிப்பு மூலம் உயர் அறிவியல் ஆராய்ச்சிகள் மட்டுமின்றி மாணவரிடையே ஆழமான அறிவியல் மனப்பான்மையை உருவாக்கிடவும் இம்மையங்கள் முக்கியப் பங்காற்றிடும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உயர்கல்வித் துறைக்கு ரூ.8,494 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மாணவர்கள் உயர் கல்வி கனவை நனவாக்கம் வகையில் 2025-26ம் நிதியாண்டில் ஒரு லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2,500 கோடி அளவுக்கு பல்வேறு வங்கிகள் கல்வி கடன் வழங்குவதை இந்த அரசு உறுதி செய்யும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடும் வகையில் கடந்த நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தில் 3.80 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். அரசு பள்ளி மாணர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடும் பொருட்டு அவர்கள் தங்களுடைய பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை வெளிநாட்டிலுள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பயின்றிட உதவிதொகை அளிக்கும் வகையில் ரூ.10 கோடி நிதி வழங்கப்படும். தமிழ்நாட்டு மாணவர்களின் உயர் கல்வி கனவை நனவாக்கும் வகையில் தேவையின் அடிப்படையில் 2025-26ம் ஆண்டில் ஒரு லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2,500 கோடி அளவுக்கு பல்வேறு வங்கிகள் கல்வி கடன் வழங்குவதை இந்த அரசு உறுதி செய்திடும்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக, பழுதடைந்த நிலையில் உள்ள 6,424 குடியிருப்புகள் ரூ.1,148 கோடி மதிப்பீட்டில் மறு கட்டுமானம் செய்யப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து அடுத்த இரு ஆண்டுகளில் 5,256 குடியிருப்புகள் ரூ.1051 கோடி மதிப்பீட்டில் மறு கட்டுமானம் செய்யப்படும். குறைந்த வருமாணம் கொண்ட வகையினருக்கான விட்டுவசதித் தேவையை நிறைவு செய்திடவும் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு புதிய குடியிருப்புகளை ஏற்படுத்திடவும் உதவிடும் வகையில் தொகுப்பு நிதியம் ஒன்று உருவாக்கப்படும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு ரூ.7,718 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* பால் பொருட்கள் சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்க திருவண்ணாமலையில் ரூ.10 கோடியில் சிப்பமிடும் நவீன இயந்திரம்
சேலம் ஆவின் பால் பண்ணையில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை ரூ.15 கோடியிலும், ஈரோடு மாவட்டத்தில் பால்பண்ணை இயந்திரங்களை நவீன மயமாக்கலுக்கு ரூ.10 கோடியிலும், சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் பால்பண்ணைகளில் நவீன பால் அளவிடும் கருவிகள், நவீன பால் தகவல் சேகரிப்பான் ஆகியவை ரூ.5 கோடியில் நிறுவப்படும். மேலும் பால் பொருட்கள் சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்க ரூ.10 கோடி செலவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வெண்ணெய் மற்றும் பால் பவுடர் சிப்பமிடும் நவீன இயந்திரம் அமைக்கப்படும்.
பள்ளிக் கல்வித்துறையில் இடம் பெற்ற முக்கிய அறிவிப்புகள்: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மேலும் 3.14 லட்சம் மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்படும். ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு. பேராசிரியர் அன்பழகன் திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 2000 பள்ளிகளில் ரூ.160 கோடியில் கணினி ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும். 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.56 கோடியில் தரம் உயர்த்தப்படும். 2676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் ரூ.65 கோடியில் அமைக்கப்படும்.
1721 முதுகலை ஆசிரியர்களும், 841 பட்டதாரி ஆசிரியர்களும் நேரடி நியமணம் மூலம் பணியமர்த்தப்படுவார்கள். நான் முதல்வன் – கல்லூரிக் கனவு திட்டத்தின் மூலம் 2000 அரசுப் பள்ளி மாணவர்கள் அகில இந்திய அளவில் உள்ள புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்படுவார்கள். ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு. ஈரோடு – சத்தியமங்கலம் – தாளவாடி, தருமபுரி – பாப்பிரெட்டிப்பட்டி, கள்ளக்குறிச்சி – சின்னசேலம், கல்வராயன் மலை, கிருஷ்ணகிரி – தளி, நீலகிரி – கோத்தகிரி, திருவண்ணாமலை – ஜவ்வாதுமலை ஆகிய தொலைதூர மலைப் பகுதிகளில் உள்ள 14 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். சேலம், கடலூர், திருநெல்வேலி மாவட்டத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நூலகங்கள் அமைக்கப்படும்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.3676 கோடி நிதி ஒதுக்கீடு. பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீடு. ”புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாததால் ரூ.2,152 கோடியை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு விடுவிக்காமல் வஞ்சித்து வருகிறது. ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கான உரிய நிதியை விடுவிக்காவிட்டாலும் மாணவர்களின் கல்வி ஒருதுளியேனும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மாநில அரசு தனது சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து விடுவித்துள்ளது.
2030ம் ஆண்டிற்குள் 100 பில்லியன் யூனிட் கூடுதல் புதுப்பிக்கத்தக்க பசுமை ஆற்றலை தமிழ்நாட்டில் உருவாக்கிட உரிய செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அந்த இலக்கை நோக்கிய பசுமைப் பயணத்தின் முதற்கட்டமாக வெள்ளிமலைப் பகுதியில் 1,100 மெகாவாட் திறன் மற்றும் ஆழியாறு பகுதியில் 1800 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்று மின் திட்டங்கள் மொத்தம் ரூ.11,721 கோடி முதலீட்டில் பொதுத்துறை தனியார் பங்கேற்புடன் உருவாக்கப்படும்.
சூரிய ஒளி நேரத்திற்குப் பின்னரும் நாள் முழுவதும் தூய்மையான புதுப்பிக்கப்பட்ட மின்சாரம் வழங்கும் நோக்கத்துடன் எதிர்வரும் 2025-26ம் ஆண்டில் மட்டும். மணிக்கு 4,000 மெகாவாட் திறன் கொண்ட மின்கலன் சேமிப்பு அமைப்புகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வரவு செலவத் திட்ட மதிப்பீடுகளில் எரிசக்தித் துறைக்கு 21,178 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே விளையாட்டு துறையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தும் நோக்கில் இந்த அரசு கடந்த 4 ஆண்டுகளில் விளையாட்டு மேம்பாட்டிற்காகவும், விளையாட்டு வீரர்களின் நலனுக்காகவும் பல்வேறு முன்னோடித்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் மாறுபட்ட நிலப்பரப்புகள் மற்றும் ஏராளமான இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் மலையேற்ற விளையாட்டு ஆர்வலர்களுக்கு ஏற்றதாக உள்ளன. பயிற்சிபெற்ற மலையேற்ற வீரர்கள் இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கும் பயணம் செய்து சிகரம் தொட விழைகின்றனர். எனவே பல்வேறு மலையேற்ற வீரர்களின் பெருங்கனவான, உலகில் உயரமான எவெரஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரியும் தமிழ்நாட்டை சார்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். அதன்படி இந்த வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.572 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
The post தமிழக அரசின் பட்ஜெட்டில் 2025-26: திருக்குறளை 45 புதிய மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.133 லட்சம் ஒதுக்கீடு; அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு appeared first on Dinakaran.