தமிழ்நாட்டின் முத்திரை பதிக்கும் திட்டங்களில் ஒன்றான தோழி பணிபுரியும் மகளிர் விடுதிகள் ஏற்கெனவே 13 இடங்களில் 1303 மகளிர் பயன்பெறும் வகையில் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. வரும் நிதியாண்டில் காஞ்சிபுரம், ஈரோடு, கரூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மேலும் 10 இடங்களில் 800 பெண்கள் பயன்பெறும் வகையில் ரூ.77 கோடியில் கட்டப்படும். சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய மாநகரங்களில் தலா ஆயிரம் மாணவியர் தங்கும் வகையில் அனைத்து நவீன வசதிகளுடன் மொத்தம் ரூ.275 கோடியில் 3 மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும்.
மூன்றாம் பாலினத்தவரின் நல்வாழ்விற்கென இவர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டினை உறுதிசெய்து வாழ்க்கையில் வெற்றிபெற புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் இவர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும். மூன்றாம் பாலினத்தவரை போக்குவரத்து மேலாண்மை, திருவிழாக் காலங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் வகையில் உரிய பயிற்சிகள் வழங்கி ஊர்க்காவல் படையில் ஈடுபடுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 50 மூன்றாம் பாலினத்தவர்களை கொண்டு சென்னை, தாம்பரம், ஆவடி மாநகரங்களில் இம்முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படும்.
மூத்த குடிமக்களின் முழுமையான பராமரிப்பிற்கென மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாநகரங்களில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீட்டில் 25 அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்படும். இந்த பகல்நேர் பாதுகாப்பு மையங்களில் முதியவர்கள் தோழமை உணர்வுடனும் பயனுள்ள பணிகளிலும் ஈடுபடலாம். பகல்நேர பராமரிப்பு உதவி, அத்தியாவசிய மருத்துவ பராமரிப்புக்கான ஏற்பாடுகள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் துணையுடன் இந்த அன்புச்சோலைகளில் வழங்கப்படும்.
புராதனக் கட்டிடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் நோக்கோடு, சென்னைப் பல்கலைக்கழக மெரினா வளாகத்தில் உள்ள கீழைக் கலையியல் ஆய்வு நிறுவன புராதனக் கட்டிடம், ராணிப்பேட்டையில் உள்ள தேசிங்கு ராஜா ராணி நினைவகம், கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையம், திருச்சியில் ராணி மங்கம்மாள் கோட்டை வளாக அலுவலகங்கள், தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் நகரில் உள்ள மகாகவி பாரதியார் இல்லம் உள்ளிட்ட 17 புராதனக் கட்டிடங்கள் ரூ.150 கோடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பொதுப் பணித்துறைக்கு ரூ.2457 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: சுற்றுலாத் துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும், சுற்றுலாத்துறையில் ஈடுபடும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும், தமிழ்நாடு சுற்றுலா ஊக்குவிப்பு வசதிச் சட்டம் ஒன்றினை தமிழ்நாடு அரசு கொண்டு வரும். லட்சக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிந்திடும் முக்கிய நகரங்களான மாமல்லபுரம், திருவண்ணாமலை, ராமேஸ்வரம், குமரி, திருச்செந்தூர், பழனி மற்றும் நாகூர்- வேளாங்கண்ணி பகுதிகளில் சற்றுலா பயணிகளின் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் உரிய கட்டமைப்பு வசதிகளை நவீன தரத்துடன் அமைத்திடும் நோக்கோடு மொத்தம் ரூ.300 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
முதற்கட்டமாக மாமல்லபுரம், திருவண்ணாமலை, திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரம் நகரங்களுக்கென வளர்ச்சி ஆணையங்கள் உருவாக்கப்படும்.
மாநிலத்திலுள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் பொருட்டு, அப்பகுதிகளில் சுற்றுலா கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உதகமண்டலத்தின் மைய பகுதியில் சுமார் 52 ஏக்கர் பரப்பளவில் ஓர் எழில்மிகு சுற்றுச்சூழல் பூங்கா ரூ.70 கோடியில் அமைக்கப்படும். சுற்றுலாத் துறையில் தனியார் முதலீட்டை ஊக்கவித்திடும் பொருட்டு மாமல்லபுரம்- மரக்காணம் வரையிலான கடலோர சுற்றுலா வழித்தடம், திருச்சி – தஞ்சாவூர்- நாகை சோழர்கால சுற்றுலா வழித்தடம், மதுரை – சிவகங்கை மரபுசார் சுற்றுலா வழித்தடம், கோவை – பொள்ளாச்சி வரையிலான இயற்கை நலன் சுற்றுலா வழித்தடம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, சுற்றுலா வளர்ச்சிக்கு பொதுத்துறை மற்றும் தனியார் துறை முதலீடுகளை ஈர்த்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
* 2024-2025ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.49,279 கோடி மதிப்பிடப்பட்ட வருவாய் பற்றாக்குறை, திறமையான நிதி மேலாண்மையின் பலனாக திருத்த மதிப்பீடுகளில் ரூ.46,467 கோடியாக குறைந்துள்ளது. 2025-2026ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில், வருவாய் பற்றாக்குறை மேலும் குறைந்து ரூ.41,635 கோடியக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2024-25ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகள் ரூ.1,08,690 கோடியாக மதிப்பிடப்பட்ட நிதி பற்றாக்குறை, திருத்த மதிப்பீடுகளில் ரூ.6,992 ேகாடியாக குறைந்து, ரூ.1,01,698 கோடி ரூபாய் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
* 2024-25ம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடு 26.43 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2025-26ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடு 26.07 சதவீதமாக மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 15வது நிதிக்குழு 2025-26ம் ஆண்டிற்கு நிர்ணயித்துள்ள 28.70 சதவீதத்திற்குள்ளாகவே உள்ளது.
* முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கு கூடுதலாக 3000 வீடுகள் ரூ.206 கோடி மதிப்பீட்டில் கட்டித் தரப்படும்.
வடஇந்தியாவில் மண்டலங்களுக்கு இடையே அமைக்கப்பட்டு வரும் ஆர்ஆர்டிஎஸ் ரயில்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்படும். இதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சென்னை – திண்டிவனம், சென்னை – காஞ்சிபுரம் – வேலூர் மற்றும் கோவை – சேலம் இடையே ஆர்ஆர்டிஎஸ் ரயில்கள் அமைக்கப்படும். ஆர்ஆர்டிஎஸ் என்பது விரைவான மண்டல ரயில் போக்குவரத்து முறை ஆகும். ஆர்ஆர்டிஎஸ் என்பது இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியமான திட்டமாகும். இது நகரங்கள் மற்றும் புறநகரங்களை இணைக்கும் வேக ரயில் போக்குவரத்து அமைப்பாகும்.
டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் முதன்முதலில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், மெட்ரோ ரயில்களை விட வேகமாகவும், சாதாரண ரயில்களை விட நவீனமாகவும் இருக்கும். தற்போது இவை டெல்லி-மேரட், டெல்லி-அல்வார், டெல்லி-பானிபத் ஆகிய வழிகளில் முதலில் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மணிக்கு 160-180 கிமீ வேகத்தில் இந்த ரயில்கள் இயங்கும். ஏசி கோச்சுகள், ஒய்-பை ஆட்டோமெட்டிக் கதவுகள், வேகமான பயணம், மெட்ரோவிற்கு மாற்றாக நீண்ட தூரப் பயணிகளுக்கு உகந்தது, மின்சாரத்தில் இயங்கும், குறைந்த கார்பன் அடையாளம் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும்.
The post தமிழக அரசின் பட்ஜெட்டில் 2025-26: சட்டப்பேரவையில் நேற்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகளின் விவரம் வருமாறு: appeared first on Dinakaran.