2 ஆயிரம் ஏக்கரில் உலக தரத்தில் சென்னை அருகே புதிய நகரம்: தமிழக பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு

* திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை ரூ.2100 கோடியில் மேம்பாலம்
* ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம்
* அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பணப்பலன் சலுகை
* 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக் கணினி
* 40 ஆயிரம் பேருக்கு அரசு வேலை
* ரூ.3,500 கோடியில் 1 லட்சம் ஏழைகளுக்கு வீடுகள்

சென்னை: சென்னை அருகே 2 ஆயிரம் ஏக்கரில் உலகத் தரத்தில் புதிய நகரம் அமைக்கப்படும், ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும், 40 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும், அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்படும், 1 லட்சம் ஏழைகளுக்கு ரூ. 3500 கோடியில் கலைஞர் வீடுகள் கட்டும் திட்டம், ரூ. 2000 கோடியில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும், 8 மாவட்டங்களில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகள் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று காலை 9.30 மணிக்கு கூடியது. முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை 9.28 மணிக்கு வந்தார். முன்னதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் ஆகியோர் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின், தங்கம் தென்னரசு ஆகியோர் சட்டப்பேரவைக்கு வந்தனர். அவர்களை அமைச்சர்கள், திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் எழுந்து நின்று மேஜையை தட்டி வரவேற்றனர். பின்னர் 9.29 மணிக்கு எடப்பாடி பழனிசாமி, எம்எல்ஏக்களுடன் வந்தார். சரியாக 9.30 மணிக்கு சபாநாயகர் அப்பாவு வந்தார். திருக்குறள் வாசித்து, அதற்கான விளக்கமும் சொல்லி கூட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் 2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) சட்டப்பேரவையில் காலை 9.30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:
* தமிழ்நாட்டில் நகர் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, பொது சுகாதாரம், இணைப்பு சாலைகள், தெரு விளக்குகள், நவீன மின் மயானம், நூலகங்கள், அறிவுசார் மையங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கும் நோக்கத்தோடு செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.4,132 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிதியாண்டில் ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 2025-26ம் ஆண்டில் பல்வேறு திட்ட நிதிகளை திரட்டி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 6,483 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.3,750 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் குறிப்பாக 570 கிமீ நீளமுள்ள சாலைகள் ரூ.486 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சியிலும், கோவை மாநகராட்சி பகுதிகளில் ரூ.200 கோடி மதிப்பீட்டிலும், மதுரை மாநகராட்சி பகுதிகளில் ரூ.130 கோடி மதிப்பீட்டிலும் சாலை பணிகள் மேற்கொள்ளப்படும்.

* கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் ஏழைகளுக்கு புதிய வீடுகள் கட்டும் பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு மேலும் 1 லட்சம் புதிய வீடுகள் ரூ. 3500 கோடியில் கட்டும் பணிகள் தொடங்கப்படும்.

* பள்ளி கல்வி துறைக்கு ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டிடங்கள் அமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 1013 ஆசிரியர்கள் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். அதன்படி 172 முதுகலை ஆசிரியர்கள் மற்றும் 841 பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்படுவார்கள். ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும். நிதி இல்லையென்றாலும் இருமொழி கொள்கை என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியுடன் உள்ளது. மும்மொழி கொள்கையை ஏற்காததால் ரூ.2,152 கோடி நிதி நிறுத்தப்பட்டுள்ளது.

* அடுத்த 2 ஆண்டுகளில் ரூ. 2000 கோடியில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு கை கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும்.
* சென்னை, நீலகிரி, திண்டுக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும்.
* சென்னையில் ரூ.100 கோடியில் புதிய அறிவியல் மையம் அமைக்கப்படும். சிங்கப்பூர் அறிவியல் மையத்துடன் இணைந்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் புதிய மையத்தை அமைக்கிறது.
* உயர்கல்வி துறைக்கு ரூ.8,494 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாடு மாணவர்கள் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதை அதிகரிக்க ஊக்குவிக்கும் வகையில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்கு ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறைக்கு ரூ.8,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* அண்ணா பல்கலைக்கழகம் அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டிலேயே சிறந்த பல்கலைக்கழகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தை மேம்படுத்த ரூ.500 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உள்ள உயர்வாய்ப்பு குறித்து அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு திட்டம் ஏற்படுத்தப்படும்.
* சேலம், கடலூர், நெல்லையில் புதிய நூலகங்கள் அமைக்கப்படும்.

* இந்த நிதி ஆண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.37,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிதாக 10 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும்.
* மூன்றாம் பாலினத்தவருக்கும் புதுமைப்பெண், தவப்புதல்வன் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
* நகர்ப்புற பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும்.
* ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* ரூ.150 கோடியில் 10 புதிய தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும்.
* பள்ளி பாடத்தில் செஸ் போட்டிகளை சேர்க்கும் விதமாக உடற்கல்வி பாடத்திட்டம் மாற்றப்படும்.

* கட்டுமான தொழிலாளர்களுக்கு முழு உடற்பரிசோதனை அட்டை வழங்கப்படும்.
* காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மையத்தை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* ரூ.1.50 லட்சம் தொழிலாளர்களுக்கு குழு காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
* 14 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் தடுப்பூசி போட ரூ.36 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.21,906 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டில் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 2023-24ல் 9.56 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
* கோவை, பல்லடத்தில் செமி கண்டக்டர் தொழில் பூங்கா அமைக்கப்படும்.
* 2,000 தற்சார்பு தொழிலாளர்களுக்கு இருசக்கர மின் வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்கப்படும்.
* ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பூங்கா அமைக்கப்படும். விருதுநகரில் மின் டைடல் பூங்கா அமைக்கப்படும். கடலூர், புதுக்கோட்டையில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும். திருச்சியில் பொறியியல் தொழில் பூங்கா அமைக்கப்படும்.

* தென்மாவட்டங்களில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.
* மதுரை, கடலூரில் ரூ.250 கோடியில் புதிய காலணி தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
* 9 இடங்களில் புதிய தொழிற்பேட்டைகள் சிறு, குறு தொழில் நிறுவனம் மூலம் அமைக்கப்படும்.
* தொழில் முதலீடுகளை ஊக்குவிக்க ரூ.3,915 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* 10 ஆண்டுகள் பழமையான 102 கூட்டுக் குடிநீர் திட்டங்களை மறுசீரமைப்பு செய்ய ரூ.675 கோடி ஒதுக்கீடு.
* சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் கையாளும் விதமாக, சென்னை நகரின் கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூரிலிருந்து உத்தண்டி பகுதி வரை 14.2 கி.மீ. நீளத்திற்கு நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை ரூ.2100 கோடியில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மூலம் அமைக்கப்படும்.

* நாட்டிலேயே அதிக நகரமயமாதல் மற்றும் அதனுடன் எழும் சவால்களை சந்தித்து வரும் மாநிலங்களுள் தமிழ்நாடும் ஒன்று. அதிலும் குறிப்பாக, சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி மற்றும் மதுரை போன்ற நகரங்களை நோக்கி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் இடம் பெயர்ந்து வருவதால், உயர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, சாலை வசதிகள். குடிநீர், தெருவிளக்குகள் மற்றும் கழிவுநீர் அகற்றல் போன்ற அடிப்படை தேவைகளையும், பேருந்து வசதிகள், கல்வி மற்றும் பொது சுகாதார வசதிகளையும் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் வழங்கிட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றன.
எனினும் பெருநகரங்களின் விரிவாக்கம் ஆங்காங்கே நடைபெறுவதை காட்டிலும், பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்குவது மிகவும் பொருத்தமானது எனும் நகரமைப்பு வல்லுநர்களின் கருத்தை ஏற்று முதற்கட்டமாக சென்னைக்கு அருகே ஓர் புதிய நகரம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உலக தரத்தில் உருவாக்கப்படும்.

இந்த புதிய நகரத்தில், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், நிதி நுட்ப வணிக மண்டலங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள். உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், வணிக வளாகங்கள், வர்த்தக மையங்கள். மாநாட்டு கூடங்கள் மட்டுமன்றி அரசு மற்றும் தனியார் துறையின் மூலம் கல்வி மற்றும் சுகாதார சேவைகள் அளிக்கும் நிறுவனங்களும் இந்நகரத்தில் அமைக்கப்படும். சமூகத்தின் உயர் வருவாய் கொண்ட வகுப்பினர், மத்திய தர வகுப்பினர் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட வகுப்பினர் என அனைவருக்குமான வீட்டு வசதிகள் நிறைந்த பன்னடுக்கு கட்டிடங்கள் கொண்டதாக இந்நகரம் அமையும். சென்னை மாநகரை இப்புதிய நகரத்துடன் இணைத்திட உரிய சாலை வசதிகள், விரைவு பேருந்துகள், மெட்ரோ ரயில் விரிவாக்கம் ஆகியவையும் உருவாக்கப்படும். உலகத்தர வசதிகளுடன் கூடிய இப்புதிய நகரத்தை உருவாக்கிடுவதற்கான முதற்கட்ட பணிகளை டிட்கோ நிறுவனம் விரைவில் தொடங்கும்.

* தென் தமிழ்நாட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குன்றிய பகுதிகளின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காகவும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று அமைக்கப்படும்.
* தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் வெவ்வேறு அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்காக இதுவரை 57,016 அரசு பணியாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர பல்வேறு அரசு துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 21,866 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் இந்த அரசு பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் 78,882 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 40,000 அரசுப் பணியிடங்களை வரும் நிதி ஆண்டிலேயே நிரப்ப உரிய நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
* அரசு அலுவலர்களின் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டு 15 நாட்கள் ஆக நிர்ணயம் செய்யப்படும். இது 1.4.2026 முதல் அமல்படுத்தப்படும். 15 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப்பலன் பெறலாம். இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

The post 2 ஆயிரம் ஏக்கரில் உலக தரத்தில் சென்னை அருகே புதிய நகரம்: தமிழக பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: