தஞ்சாவூர், மார்ச்13: திருவையாறு வட்ட விவசாயிகளுக்கு கண்டுணணர் சுற்றுலா மூலம் உழவர் சந்தை செயல்பாடுகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. தஞ்சாவூரை அடுத்த நாஞ்சிக்கோட்டை பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. அங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள விவசாயிகள் சாகுபடி செய்யும் காய்கறிகள், கீரைகள், வாழைப்பழம், வாழைக்காய், பூசணிக்காய், பரங்கிக்காய், வெண்டைக்காய், எழுமிச்சை, தேங்காய், வாழை இலை உள்ளிட்டவற்றை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.
இந்த நிலையில் திருவயைாறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சுமார் 20 பேர் உழவர் சந்தையை பார்வையிட்டனர். வேளாண்மை துறை சார்பில் திருவையாறு வட்டாரத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு உள் மாவட்ட அளவிலான கண்டுணர் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு, தஞ்சாவூர் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறைக்கு விவசாயிகள் அழைத்து வரப்பட்டனர். அங்கு வேளாண்மை அலுவலர் கனிமொழி, விளக்கம் அளித்தார்.
மேலும் அதே வளாகத்தில் அமைந்துள்ள உழவர் சந்தைக்கு விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு செயல்படும் வேளாண் குழுக்கள் பற்றியும், வேளாண் விளைபொருட்களை சிறப்பாக சந்தைப்படுத்துதல் பற்றியும் வேளாண்மை அலுவலர் ஜெய் ஜி பால் விளக்கம் அளித்தார். இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை திருவையாறு வட்டார அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சிவரஞ்சனி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கண்ணன் மற்றும் ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.
The post மாவட்ட வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு கண்டுணர் சுற்றுலா: உழவர் சந்தையை நேரில் பார்வையிட்டனர் appeared first on Dinakaran.