இந்த வரி விதிப்பிலிருந்து எந்த ஒரு நாட்டிற்கும் விதி விலக்கு கிடையாது. கடந்த 2018ம் ஆண்டிலேயே டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் எஃகு, அலுமினியத்தின் மீது வரிகளை அறிவித்தார். ஆனாலும், கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு எஃகு மீதான வரிக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அலுமினியத்திற்கு 10 சதவீத வரி அமலில் இருந்தது. தற்போது இவ்விரு உலோகங்கள் மீதும் 25 சதவீத வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து முன்னணி நிறுவன சிஇஓக்களை சந்தித்து பேசிய அதிபர் டிரம்ப், ‘‘வரி அதிகரிப்பு மூலம் உள்நாட்டில் உற்பத்தியை நம்மால் பெருக்க முடியும். இதனால் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். இது நிச்சயம் அமெரிக்காவுக்கு நன்மையாக இருக்கும்’’ என்றார். உலகிலேயே அதிகளவில் எஃகு, அலுமினியம் இறக்குமதி செய்யும் நாடு அமெரிக்கா. அமெரிக்காவிற்கு எஃகு, அலுமினியம் செய்வதில் கனடா, மெக்சிகோ, பிரேசில், தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.
டிரம்ப் அறிவிப்பால் இந்த நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும். அதே சமயம், அமெரிக்கா வரி விதிப்பை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்க பொருட்கள் மீதான வரியை உயர்த்தி அறிவித்துள்ளார். ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான்டெர் லேயன் விடுத்த அறிவிப்பில், ‘‘ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளுக்கு எதிராக சுமார் ரூ.2.5 லட்சம் கோடிக்கணக்கான கூடுதல் வரியை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதை ஈடுகட்டும் விதமாக அமெரிக்காவின் ஜவுளி, வீட்டு உபகரணங்கள் மற்றும் வேளாண் உணவுப் பொருட்கள் மீது அதே அளவு வரி வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்’’ என்றார். ஆனாலும், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்கா மீது பதில் வரி விதிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளன.
* இந்தியாவுக்கு பாதிப்பா?
அமெரிக்காவுக்கு இந்தியா அதிகளவில் எஃகு, அலுமினியம் ஏற்றுமதி செய்வதில்லை என்பதால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என கூறப்படுகிறது. முந்தைய நிதியாண்டில் அமெரிக்காவுக்கு ரூ.4,000 கோடி மதிப்பிலான எஃகு, அலுமினியத்தை மட்டுமே இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
ஆனால் டிரம்பின் உலகளாவிய இந்த வரி விதிப்பால், உலகம் முழுவதும் எஃகு, அலுமினியத்தின் விலை அதிகரிக்கும் என்பதால் அது இந்திய ஏற்றுமதியை பாதிக்கும் என மூடிஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுதவிர, ஐரோப்பிய ஒன்றியம், பிரேசில், தென் கொரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி ஏப்ரல் 2ம் தேதி அமலுக்கு வரும் என அதிபர் டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
The post அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியத்திற்கு டிரம்பின் 25% வரி அமல்: ஐரோப்பிய ஒன்றியம் பதில் நடவடிக்கை appeared first on Dinakaran.