இதனிடையே, ‘’தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’’ என்ற தலைப்பில் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டங்கள் மாவட்ட திமுக சார்பில் நடைபெறும் என்றும் தொகுதிமறு சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளில் எண்ணிக்கையை குறைத்து நம்மை இரண்டாந்தர குடிமக்களாக மாற்ற நினைக்கும் மோடி அரசின் சதியை மக்களிடம் எடுத்துக்கூறும் விதமாகவும் மும்மொழி கொள்கை என்ற பெயரில் தமிழகத்தில் இந்தி திணிப்பை மேற்கொள்வதை மக்களிடம் புரிய வைக்கும் விதமாகவும் மாவட்ட கழக செயலாளர்களின் தலைமையிலும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையிலும் நடைபெறும் விழிப்புணர்வு பொதுக்கூட்டங்களில் மாவட்டம், மாநகரம், ஒன்றியம், பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், பாகமுகவர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில், திருவள்ளூரில் மாலை மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், மாவட்ட செயலாளர்கள் ஆவடி சா.மு.நாசர், திருத்தணி எஸ்.சந்திரன், வல்லூர் எம்எஸ்.ரமேஷ்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;
“நம் மொழி, நிலத்தை கெடுக்கின்ற எதிரிகள் எவராக இருப்பினும் துணிவுடன் எதிர்கொள்வோம். இப்படைத் தோற்கின், எப்படை வெல்லும் என்று ஒன்றிய ஆட்சியாளர்களை நோக்கி கேட்கின்ற வகையில் தமிழினம் திரண்டுள்ளது.
10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு இருந்தது. 3 ஆண்டு திமுக ஆட்சியில் நமது மாநிலம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் உரிமைகள் டெல்லியில் அடகு வைக்கப்பட்டிருந்தது.
திமுக ஆட்சி அமைந்ததால் நாடும் நாட்டு மக்களும் நிம்மதியாக உள்ளனர். அனைத்து தரப்பு மக்களுக்கான ஆட்சியை நாம் நடத்தி வருகிறோம். பதவி சுகத்துக்காக ஒன்றிய அரசிடம் பணிந்து செல்லும் அடிமைக் கூட்டம் நாங்கள் அல்ல.
நாங்கள் உழைத்து, வரியை செலுத்திய பணத்தில் இருந்து எங்களுக்கான நிதியை தருவதில் என்ன பிரச்னை? மாணவர்களின் நலனுக்கான நிதியை கொடுக்காமல் இருப்பது நியாயமா? . தமிழ்நாடு என்ன பிச்சைக்கார மாநிலமா?
ஒரு மாநில அரசு நாட்டிற்கே எடுத்துக்காட்டாக இருந்தால், அந்த மாநில அரசுக்கு துணை நிற்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. ஆனால், பாஜக அரசு தமிழ்நாடு தலைநிமிர்ந்து நடைபோடுகிறதே என்ற பொறாமையோடு செயல்படுகிறது.தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் திமுக காவலாக இருக்கிறதே என்ற எரிச்சலோடு உள்ளது. ஒன்றிய அரசு நம்மை சிறுமைப்படுத்தப் பார்க்கிறது.
பாஜகவின் எதேச்சதிகார எண்ணம் கூட்டாட்சி தத்துவத்தை அழித்து விடும். இந்தியை வளர்ப்பதற்கு பதில் இந்தியாவை வளர்க்கப் பாருங்கள் என பிரதமர் மோடிக்கு வேண்டுகோள். இந்தியை வளர்க்க கோடி கோடியா கொட்டி கொடுப்பீங்க; தமிழுக்கு ஓரவஞ்சனை. எத்தனை ஆயிரம் கோடி கொட்டினாலும் சமஸ்கிருதத்தை வளர்க்க முடியாது.
கேள்வி கேட்டால் தொகுதிகளை குறைப்போம் என எதேச்சதிகார ஆட்சி நடத்துகிறது பாஜக. பாஜகவின் பாசிச நடவடிக்கைகளுக்கு உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம். பாஜகவின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவையே திரட்டுவோம். பாஜகவின் மதவாத போக்கு மதசார்பற்ற தன்மையை சிதைக்கிறது.
தொகுதி சீரமைப்பால் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும். பிற மாநில முதலமைச்சர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறேன். ஒன்றிய பாஜக அரசின் சதியை திமுக தடுத்து நிறுத்தும். வடமாநிலங்களில் வரும் வெற்றியை வைத்தே ஆட்சியை தக்க வைக்க பாஜக சதி செய்கிறது” என உரையாற்றினார்.
The post இந்தியை வளர்ப்பதற்கு பதில் இந்தியாவை வளர்க்கப் பாருங்கள்: திருவள்ளூரில் திமுக சார்பில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.