திருப்பூர், மார்ச் 12: திருப்பூரிலிருந்து கணக்கம்பாளையம் செல்லும் டவுன் பஸ் ஒன்று மத்திய பஸ் நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை புறப்பட்டு சென்றது. அப்போது, ரயில் நிலையத்தில் இருந்து புஸ்பா தியேட்டர் மேம்பாலத்தில் வரும்போது கார் ஒன்று பஸ்சை முந்தி செல்ல முயன்றது. இந்நிலையில் மேம்பாலத்தில் உள்ள வளைவான இடத்தில் பஸ் திரும்பும்போது பஸ்சில் ஒரு புறம் கார் மீது மோதியது. இதில், முந்தி செல்ல முயன்ற கார் நடுரோட்டில் திசை திரும்பி நின்றது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில், கார் ஓட்டுனரும், பஸ் ஓட்டுனரும் நடுரோட்டில் சண்டையிட்டுக் கொண்டதால் புஸ்பா தியேட்டர் மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். இது குறித்து வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post புஸ்பா தியேட்டர் மேம்பாலத்தில் அரசு பஸ், கார் மோதி விபத்து appeared first on Dinakaran.