பல்லடம், மார்ச் 10: பல்லடம் நகரமானது கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் இப்பகுதியில் திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவினாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால் பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. திருமணம் போன்ற விஷேச நாட்களில் கிலோ மீட்டர் கணக்கில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்பது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுப முகூர்த்த நாள் என்பதால் பல்லடத்தில் கார், மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்தது.
இதனால் கோவை-திருச்சி ரோட்டிலும், மங்கலம் ரோட்டிலும், பொள்ளாச்சி ரோட்டிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றன. போக்குவரத்து போலீசார் நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் வைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இருந்த போதிலும் கட்டுக்கடங்காத வாகனப் போக்குவரத்தால், வாகனங்கள் ஊர்ந்து சென்றது. போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் திணறினர். பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மேம்பாலம் கட்ட வேண்டும் அல்லது புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
The post பல்லடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.