×

கிளி ஜோசியம் பாக்கலையோ…. கிளி ஜோஸ்யம்….. திசை மாறிய ஜோதிடர்கள்

* 90ஸ் கிட்ஸ்கள் பார்த்து ஆனந்தம் அடைந்த விஷயம்
* கிளிக்கு பதிலாக ஜோதிடம் பார்க்கும் எலி

கிளி ஜோதிடம் என்பது 90ஸ் கிட்ஸ்கள் மட்டுமே பார்த்து ஆனந்தம் அனுபவித்த விஷயம், அது இந்த கால கிட்ஸ்களுக்கு கிடைக்கவில்லை. இப்போது கிளிக்கு பதில் வேறு பறவைகள், எலிகள் கொண்டு ஜோதிடம் பார்த்தாலும் அதன் மேல் நம்பிக்கை இல்லாததால் ஜொலிக்கவில்லை. திருமணம், வீடு வாங்குதல் உள்ளிட்ட மிகப்பெரிய காரியங்களுக்கு ஜோதிடர்களை அணுகி நாள், நட்சத்திரம் பார்ப்பது வழக்கம். சிறு சிறு காரியங்களுக்கு செல்பவர்கள் மன திருப்பதிக்காக அணுகுவது கிளி ஜோதிடர்களை தான். 90ஸ் கிட்ஸ்களுக்கு கிளி ஜோதிடம் என்பது சாதாரண விஷயம். ஏனெனில் கிளி ஜோதிடர்கள் கூண்டில் அடைக்கப்பட்ட கிளிகளுடன் வீதிவீதியாக சுற்றி வருவார்கள். ஜோதிடம் பார்க்க நினைப்பவர்கள் அழைத்தால், உடனே ஒரு துண்டை விரித்து அந்த இடத்திலேயே அட்டைகளை பரப்பி கிளியை திறந்து விட்டு, அது எடுத்து தரும் அட்டையின் உள்ளே வைக்கப்பட்டுள்ள படத்தின் அடிப்படையில் நினைத்த காரியம் கைக்கூடுமா என்று கூறிவிடுவார்கள்.

90 சதவீதம் அவர்கள் நல்லதாகவே கூறுவார்கள் என்பதால் கிளி ஜோதிடரை பார்த்தவுடன் ஜோசியம் பார்க்க பெரும்பாலானவர்கள்அழைத்து விடுவார்கள். 90களில் வெளியில் சென்று விட்டு வீடு திரும்புவதற்குள் எப்படியும் 2 கிளி ஜோதிடர்களை நாம் கடந்து செல்ல வேண்டி இருக்கும். அப்படி முக்குக்கு முக்கு கிளி ஜோதிடர்கள் அமர்ந்திருப்பர், அலலது நடந்து கொண்டிருப்பர். கிளிஜோசியம் பாக்கலையோ…. கிளி ஜோசியம் என்ற குரல் கேட்டாலே வீட்டிற்குள் அமர்ந்திருக்கும் பெண்கள் அவரை அழைத்து வீட்டு திண்ணையில் அமர வைத்து விடுவார்கள். பிறகென்ன எதிர்வீடு, அண்டை வீடு, அடுத்த தெரு வீடு என கிராமத்தில் உள்ள பலர் கிளிஜோசியரை சுற்றி கூடி விடுவர். அங்கிருந்து கிளம்புவதற்குள் கிளி ஜோஷியரின் பாக்கெட் ஒரு கணிசமான தொகையினால் கனமாகி விடும்.

வீதிகளில் அமர்ந்திருக்கும் கிளி ஜோதிடரிடத்தில் ஒரு காதலர்களோ, கல்யாணம் ஆகாத வடிவேலு போன்ற ஒரு வயதான ஆண்மகனோ, மகளுக்கு திருமணம் கைகூடுமா என்ற ஏக்கத்துடன் அமர்ந்திருக்கும் ஒரு வயதான பெண்ணையோ 90களில் எளிதாக காண முடியும். ஜோதிடம் பார்ப்பது என்பதையும் தாண்டி, கிளி ஜோதிடம் என்பது அனைவரும் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு விஷயமாக இருந்து வந்தது. இந்நிலையில் இந்த கிளி ஜோதிடத்திற்கு திடீரென தடை விதிக்கப்பட்டது. இதற்கு காரணம் கிளியை வன விலங்கு என்று அறிவிக்கப்பட்டதால், கிளியை வைத்து ஜோதிடம் பார்க்கவோ, வீட்டில் வளர்க்கவோ கூடாது என்று சட்டம் தடை கூறப்பட்டது. இதனால் கிளியை வைத்து ஜோதிடம் பார்த்தவர்கள் தங்கள் பிழைப்பிற்கு வேறு வழியை தேட தொடங்கினர். அந்த வகையில் ஜோதிடர்கள் தற்போது தங்கள் ஜோதிட முறையில் மாற்றம் செய்ய தொடங்கினர்.

கிளிக்கு பதிலாக சீமை எலி மற்றும் கண்ணூர் பைனாப்பிள் குருவி, காற்றிலி கொண்டை குருவி ஆகியவற்றை வைத்து ஜோதிடம் பார்க்க தொடங்கி விட்டனர். கிளிகளுக்கு பயிற்சி கொடுத்து ஜோதிடம் பார்ப்பது போல் தற்போது ஜோதிடர்கள் கினி என்னும் வகையான எலிக்கு தங்களுக்கு விருப்பப்பட்ட பெயரை வைத்து, பயிற்சி அளித்து ஜோதிடம் பார்க்க தொடங்கியுள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் இருந்து 20க்கும் அதிகமான ஜோதிடர்கள் சீமைஎலி மற்றும் பறவைகளுடன் வேளாங்கண்ணி பகுதியில் ஜோதிடம் பார்த்து வருகின்றனர்.இவர்கள் சீமை எலி, பறவைகள் ஆகியவற்றை வைத்து ஜாதகம் பார்த்து குறி சொல்லியும் வருகின்றனர். இது குறித்து கிளிஜோதிடம் பார்க்கும் தொழில் செய்து தற்போது, இந்த ஜோதிடம் பார்த்துவருபவர் கூறும்போது, கிளி ஜோதிடத்திற்கு இருந்த மவுசு, இந்த ஜோதிடத்திற்கு இல்லை.

இதற்கு காரணம் கிளி ஜோதிடத்தின் மீது இருந்த நம்பிக்கை இந்த ஜோதிடங்களில் எங்களுக்கு இல்லை. எனவே வேண்டாம் என்று பலர் மறுக்கிறார்கள். என்ன செய்வது வயிற்கு பிழைப்பிற்காக தொடர்ந்து இந்த தொழிலை செய்து வருகிறோம். ஆனாலும் போதிய வருமானமின்றி திண்டாடி வருகிறோம். நாங்கள் கிளிகளை கூண்டுக்குள் அடைத்து வைத்திருப்போமே தவிர, அதற்கு தேவையான அனைத்தையும் தந்து விடுவோம். எங்களின் பிள்ளைகளை போல பார்த்துக்கொள்வோம். வீட்டிற்கு சென்றால் திறந்து விட்டு சுதந்திரமாக சுற்றி திரிய அனுமதிப்போம். எனவே மத்திய அரசு இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு பச்சை கிளிகளை மட்டும் வன விலங்கு சட்டத்தில் இருந்து அகற்றிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

90ஸ் கிட்ஸ்கள் அனுபவித்த ஆனந்தம்
ஒருவர் கிளி ஜோதிடம் பார்க்க அமர்ந்தாலே போதும் சுற்றிலும் வேடிக்கை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கவே ஒரு கூட்டம் கூடி விடும். கூண்டு திறக்கப்பட்ட பின்னர் அந்த கிளி மெல்ல தலையை வெளியில் நீட்டி கிளி ஜோதிடரை பார்க்கும், அவரும் கிளியின் பெயரை சொல்லி வாம்மா… வந்து…. அண்ணனுக்கு ஏத்த சீட்ட எடுத்து கொடு என்று சொல்லியவுடன்? பழங்கால நடிகைகளை போல இடுப்பை ஆட்டி நடந்து வந்து ஒவ்வொரு சீட்டாக எடுத்து போட்டு, கடைசியாக ஒரு சீட்டை தேர்ந்தெடுக்கும். அதன் பின்னர் ஜோஷியக்காரர் கொடுக்கும் இரண்டு நெல் மணிகளை தனது அலகால் கவ்வி எடுத்துக்கொண்டு, தானே கூண்டுக்குள் சென்று அடைந்து விடும். கிளியின் நடை, நெல் மணி கொடுக்க மறந்து விட்டால் அது கீச்சிடும் குரல், அட்டைகளை ஒவ்வொன்றாக அழகாக எடுத்து போடும் அழகு… அடடா…. அந்த காட்சிகளை காணவே ஆனந்தமாக இருக்கும். இதெல்லாம் 90ஸ் கிட்ஸ்கள் மட்டுமே அனுபவித்த ஒரு வரம்.

The post கிளி ஜோசியம் பாக்கலையோ…. கிளி ஜோஸ்யம்….. திசை மாறிய ஜோதிடர்கள் appeared first on Dinakaran.

Tags : Josium Pakalayo ,Josiam ,
× RELATED ஜாதிய வீடியோக்கள் ரவுடிகளின் ரீல்ஸ்...