தமிழகத்தின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. ஆம், அடுத்த ஆண்டில் புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், நாடு முழுவதும் ஒன்றிய அரசு தொகுதி மறுசீரமைப்பு செய்வதால் பாதிக்கப்பட்டப் போகும் முக்கிய மாநிலம் தமிழ்நாடு தான். இது இன்று, நேற்றல்ல, 50 ஆண்டாக நீடித்து வரும் அச்சம். இப்போது இந்த அச்சம் நெருங்கியிருக்கிறது. அதனால்தான் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்பிரச்னையை கையில் எடுத்து கடும் எதிர்ப்பை பதிவு செய்யத் தொடங்கி உள்ளார்.
* தொகுதி மறுசீரமைப்பு செய்வதால் தமிழ்நாட்டிற்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?
மக்கள்தொகை அடிப்படையில் எம்பிக்கள் எண்ணிக்கை ஒதுக்கப்பட வேண்டும் என்கிறது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 81. அதாவது, எம்பிக்களின் எண்ணிக்கை கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் இருக்க வேண்டும். 1952ல் மக்களவை எம்பிக்களின் எண்ணிக்கை 499 ஆக இருந்தது. அதன்பின் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டன.
1970க்குப் பிறகு இந்தியாவில் மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. குடும்பக் கட்டுப்பாடு திட்டங்கள் வேகமெடுத்தன. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் இவற்றை சிறப்பாக செய்து மக்கள்தொகையை கட்டுப்படுத்தின. ஆனால் வடமாநிலங்களில் மக்கள் தொகை குறைப்பு குறைந்த அளவிலேயே இருந்தது. இதனால் மக்கள்தொகையில் மாறுபட்ட விகிதங்கள் ஏற்பட்டதால் 1980க்குப்பிறகு தொகுதி மறுசீரமைப்பு செய்ய தென் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்தால், மக்கள்தொகையை கட்டுப்படுத்தாத வடமாநிலங்களுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும். இது வேலையே செய்யாத அவர்களை பாராட்டுவதை போலாகும் என தென் மாநிலங்கள் எதிர்த்தன. இதனால் 1976ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி, தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்து அரசியலமைப்பு சட்டப்பிரிவு 82ஐ கொண்டு வந்தார். அதன்பின் வந்த வாஜ்பாய் அரசு 2001ம் ஆண்டுக்கு பிறகு மேலும் 25 ஆண்டுக்கு நீட்டித்தது.
எனவே, 1971ல் 56 கோடி மக்கள்தொகை இருந்த போது மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 543 ஆக நிர்ணயிக்கப்பட்டது இப்போது வரை தொடர்கிறது. இரண்டாவது 25 ஆண்டு கால நீட்டிப்பு வரும் 2026ம் ஆண்டுடன் முடிவடைகிறது. கொரோனா காரணமாக 2021ல் எடுக்கப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஒன்றிய பாஜ அரசு, புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே 50 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இப்பிரச்னை தலைதூக்கி உள்ளது. 2026ல் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் அதற்கு 2 வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, தற்போது உள்ள மொத்த மக்களவை தொகுதிகளை அதிகரிக்காமல், மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்யலாம். அல்லது மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையையும், ஒவ்வொரு மாநிலத்தின் எம்பிக்கள் எண்ணிக்கையையும் மாற்றலாம். இவற்றில் எதை செய்தாலும் அதிகம் பாதிக்கப்படப்போவது, முறையாக மக்கள்தொகையை கட்டுப்படுத்தி நாட்டிற்கு நன்மை செய்த தென் மாநிலங்கள்தான்.
தற்போது, மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால் தமிழ்நாட்டில் 18 லட்சம் பேருக்கு ஒரு எம்பி உள்ளார். அதுவே உத்தரப்பிரதேசத்தில் 30 லட்சம் பேருக்கு ஒரு எம்பி உள்ளார். இந்தியாவிலேயே பெரிய மாநிலமான உபியில் சுமார் 25 கோடி பேர் உள்ளனர். அங்கு தற்போது 80 எம்பி தொகுதிகள் உள்ளன. 7 கோடி மக்கள் உள்ள தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் உள்ளன. நாட்டிலேயே அதிகமான தொகுதிகளை கொண்ட மாநிலம் உபிதான்.
2026 மக்கள் தொகை கணக்கெடுப்பில், நாட்டின் மொத்த மக்கள்தொகை 142 கோடியாக இருக்கும் பட்சத்தில், மொத்த எம்பி தொகுதிகளின் எண்ணிக்கையை (543) மாற்றாமல் மறுவரையறை செய்தால், தமிழ்நாட்டில் 8 தொகுதிகள் குறைக்கப்படும் என்கின்றன புள்ளிவிவரங்கள். இதே போல, 20 தொகுதிகளை கொண்ட கேரளாவுக்கும், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைச் சேர்த்து தலா 8 தொகுதிகளும் குறையும். கர்நாடகா 2 தொகுதிகளை இழக்க வேண்டியிருக்கும். மேற்கு வங்கம் 4 தொகுதிகளை பறிகொடுக்கும். இப்படி தென் மாநிலங்கள் தேய்ந்து போகும் நிலையில், வடக்கில் உள்ள உபிக்கு 11 தொகுதிகளும், பீகாருக்கு 10 தொகுதிகளும் அதிகமாக கிடைக்க வாய்ப்புள்ளது. அதாவது, தென் மாநிலங்கள் 35 தொகுதிகள் வரை இழக்கும். அதுவே வடமாநிலங்களில் 35 தொகுதிகள் வரை அதிகரிக்கும்.
ஒருவேளை மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள்தொகைக்கு ஏற்ப அதிகரித்தால், கிட்டத்தட்ட 848 தொகுதிகளாக உயர்த்தலாம் என கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. அப்படி செய்தால் தமிழ்நாட்டில் எம்பி தொகுதிகளின் எண்ணிக்கை 39ல் இருந்து 49 ஆக அதிகரிக்கும். அதாவது 10 தொகுதிகள் மட்டுமே உயரும். இதுவே உபிக்கு 80ல் இருந்து 143 ஆக அதிகரிக்கும். அதாவது 63 தொகுதிகள் அதிகம். பீகாருக்கு 40ல் இருந்து 79 தொகுதிகளாக அதிகரிக்கும். குஜராத் 43, மகாராஷ்டிரா 76, மபி 52 என ஒட்டுமொத்த வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை மிக கணிசமாக எகிறும்.
இதன் காரணமாக வடக்கு வளரும், தெற்கு தேயும் நிலைக்கு தள்ளப்படும். ஏற்கனவே, நீட், மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு மக்கள்விரோத திட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களே எதிர்ப்பு குரல் கொடுக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் பட்சத்தில் அதன் மூலம் எதிர்ப்பு குரல்களும் நசுக்கப்படும். இதுதவிர, தனித் தொகுதிகளும் குறைக்கப்பட்டு, அவர்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும். மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து விஷயத்திலும் பின்னடைவு ஏற்படும். எனவே, தொகுதி மறுசீரமைப்பு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் எந்த வகையில் செய்யப்பட்டாலும் அது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு ஆபத்தே என அரசியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
* அப்ப புரியல… இப்ப புரியுது!
டெல்லியில் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக மோடி அரசு ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தின்கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டி உள்ளது. அதில், மக்களவையில் 888 பேர் அமர முடியும். மாநிலங்களவையில் 384 பேர் அமர முடியும். கூட்டுக் கூட்டத்தின் போது மக்களவையில் 1,224 பேர் வரையிலும் அமரலாம். எனவே, 2026 மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு தொகுதி மறுவரையறை செய்து தென் இந்தியாவின் குரலை நசுக்க வேண்டுமென மோடி அரசு ஏற்கனவே திட்டமிட்டு விட்டதா என்றும் எதிர்க்கட்சிகள் சந்தேகம் கொண்டுள்ளன.
The post மக்கள்தொகைப்படி தொகுதி மறுசீரமைப்பு செய்தால் வடக்கு வளரும்; தெற்கு தேயும்: தமிழ்நாட்டிற்கு ஏற்படப் போகும் பாதிப்புகள் என்ன? appeared first on Dinakaran.