சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும், அதோடு சரக்கு விமானங்கள், தனி விமானங்கள், போக்குவரத்தும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.சென்னை விமான நிலையத்தில் கடந்த 2015ம் ஆண்டு அளவில் பயணிகள் எண்ணிக்கை 2.2 கோடியாக இருந்தது. அது படிப்படியாக அதிகரித்து 2025ல் 3.5 கோடியை நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இது, மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்த இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு எடுத்து, ஒன்றிய அரசின் அனுமதியை கடந்த 2017ம் ஆண்டு கோரியது. ஒன்றிய அரசும் அதற்கான அனுமதியை அளித்ததோடு, சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் மூலம் நிதியும் ஒதுக்க தயாரானது. அதன்படி, சென்னை விமான நிலையத்தை ரூ.2,467 கோடி மதிப்பீட்டில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் விரிவுபடுத்துவது என்றும், இப்பணிகளை 2 கட்டங்களாக, பேஸ் 1, பேஸ் 2 என்று கட்டி முடிக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி முதல் பேஸ் 1.36 லட்சம் சதுர மீட்டரில் ரூ.1,260 கோடியிலும், பேஸ் 2, ஒரு லட்சம் சதுர மீட்டரில் ரூ.1,207 கோடியில் அமைக்கவும் திட்டமிடப்பட்டது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய விமான நிலைய கட்டிடத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அடிக்கல் நாட்டினார். இதில் முதல் பேஸ் பணிகள் 36 மாதங்களில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடைந்து இருக்க வேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு, ஊரடங்கு உள்பட பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமாக நடந்து, கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரதமர் மோடி, புதிய ஒருங்கிணைந்த முனையத்தை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில், ஏற்கனவே சர்வதேச முனையமாக செயல்பட்டுக் கொண்டிருந்த டெர்மினல் 3 கட்டிடங்களை இடிக்கும் பணிகள் தொடங்கி நடந்தன. அப்பணிகள் நிறைவடைந்தத பின்பு, தற்போது பேஸ் 2 கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து கொண்டிருக்கின்றன. இந்த இரண்டாம் கட்ட பணிகள், இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைந்து, 2026 மார்ச் மாதத்திற்கு செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டாம் கட்ட புதிய முனையத்தில், 8 நுழைவாயில்கள், 60 செக்கிங் கவுன்டர்கள், 10 எக்ஸ்ரே ஸ்கேனர்கள், 9 ரிமோட் போர்டிங் கேட்டுகள், 8 ஏரோபிரிட்ஜ்கள் உள்ளிட்ட வசதிகள் செய்வதற்கு திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. வருகை பகுதியில் பயணிகளின் உடைமைகள் வரும் கன்வேயர் பெல்ட்கள் அதிநவீன முறையில் அமைக்கப்பட இருக்கின்றன. அதேபோல் பயணிகளின் உடைமைகளில் உள்ள பொருட்களை கண்டறிவதற்கான, அதிநவீன தானியங்கி ஸ்கேனர்கள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட இருக்கின்றன.
சென்னை விமான நிலையத்தில் தற்போது பீக் அவர்ஸ் எனப்படும் நெரிசல் நேரங்களில், ஒரு மணி நேரத்திற்கு 12,000 பயணிகள், 24 அல்லது 25 விமானங்களில் வந்து செல்கின்றனர். இந்த புதிய முனையம் செயல்பாட்டிற்கு வந்த பின்பு அது மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இப்போது விமான நிலையத்தில் ஆண்டுக்கு சுமார் 3 கோடிக்கு மேல் பயணிகள் கையாளப்படுகின்றனர். இனிமேல் இந்த புதிய முனையம் செயல்பாட்டிற்கு வந்த பின்பு, ஆண்டிற்கு 3.5 கோடிக்கு மேல் பயணிகளை கையாளும் விதத்தில் தரம் உயர்த்தப்படுகிறது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த புதிய ஒருங்கிணைந்த முனையம் வருகிற 2026 மார்ச் மாதத்தில் செயல்பாட்டிற்கு வந்த பின்பு, விமான நிலையத்திற்கு சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான பயணிகள், எந்த கேட் வழியாகவும் உள்ளே வருவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும். இதனால் பயணிகள் பாதுகாப்பு சோதனை பகுதிகளில் நீண்ட நேரம் காத்திருப்பது குறைக்கப்படும்.சென்னை விமான நிலையத்தில் தற்போது டெர்மினல் 1, 2, 4 என்று 3 முனையங்கள் செயல்பாட்டில் உள்ளன. 2026 ஜூன் மாதத்திற்கு பின்பு புதிய டெர்மினலான 3 செயல்பாட்டிற்கு வந்த பின்பு, சென்னை விமான நிலையத்தில் 4 டெர்மினல்கள் செயல்படும்.
இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கையாளும் திறன் 3.5 கோடிக்கும் அதிகமாக இருக்கும். அதேபோல் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் எண்ணிக்கைகளும் 500க்கும் அதிகமாக இருக்கும். இதைத்தொடர்ந்து புதிதாக அமைக்கப்படும் 5வது முனையம், சரக்கு விமான போக்குவரத்து மற்றும் சரக்குகளை கையாள்வதற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
The post ரூ.1207 கோடியில் விரிவாக்க பணிகள் விறுவிறுப்பு 2026 மார்ச் மாதம் செயல்பாட்டுக்கு வருகிறது சென்னை விமான நிலைய புதிய டெர்மினல் appeared first on Dinakaran.