ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களை விடுவிக்க வேண்டும்: இந்தியா மீண்டும் கோரிக்கை


டெல்லி: ரஷ்ய ராணுவத்தில் பணியில் இருந்த கேரள மாநிலத்தை சேர்ந்தவர் யுத்த களத்தில் தாக்குதலில் உயிரிழந்த நிலையில் அங்கு ராணுவப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியர்கள் அனைவரையும் விரைந்து விடுவிக்க வேண்டும் என இந்தியா மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது. இதை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் உறுதி செய்துள்ளார்.

“ரஷ்ய நாட்டு ராணுவத்தில் பணியில் இருந்த கேரளவைச் சேர்ந்த இந்தியர் உயிரிழந்த தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. இது துரதிர்ஷ்டவசமானது. தாக்குதலில் காயமடைந்த மற்றொரு இந்தியர் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் அவர்களது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசி உள்ளது. இயன்ற வரையில் அவர்களுக்கு அனைத்து சாத்தியமான உதவிகளும் வழங்கப்படும்.

இறந்தவரின் உடலை விரைந்து தாயகம் கொண்டு வரும் நோக்கில் ரஷ்ய தரப்பு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். காயமடைந்து சிகிச்சையில் உள்ள நபரையும் இந்தியா அனுப்ப வேண்டும் என கோரியுள்ளோம்.

மேலும், ரஷ்ய ராணுவத்தில் பணியில் உள்ள இந்தியர்கள் அனைவரையும் விரைந்து விடுவிக்க வேண்டும் என ரஷ்யா வசம் நாங்கள் மீண்டும் கோரியுள்ளோம்” என ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ரந்தீர் ஜெய்ஸ்வால் தன் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

The post ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களை விடுவிக்க வேண்டும்: இந்தியா மீண்டும் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: