சென்னை: ஜனவரி 15ம் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து சென்னை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 4,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி, தினமும் 100 முதல் 120 கோடி ரூபாய் வரை மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. புத்தாண்டு, பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில், மதுபானங்களின் விற்பனை அதிகமாக உயரும், தினசரி மது விற்பனை சுமார் 200 கோடி ரூபாயை எட்டும்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையால் டாஸ்மாக் விற்பனை களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில், பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாளான ஜனவரி.15 ஆம் தேதி திருவள்ளுவர் தினம் என்பதால் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஜனவரி.26 குடியரசு தினம் கொண்டாடப்படுவதால் அன்றைய தினமும் டாஸ்மாக் கடைகள் இயங்காது.
மேலும் டாஸ்மாக் கடைகளை சேர்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்புகளை சேர்ந்த பார்கள், உரிமம் கொண்ட ஹோட்டல் பார்கள் அனைத்தும் மூடப்படும், அனுமதியின்றி திறக்கப்பட கூடாது என கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்களிலும் மதுபானம் விற்க கூடாது எனவும், அதனை மீறினால் மதுபானம் விற்பனை விதிகளின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஜனவரி 15ம் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: சென்னை கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.