பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று 3,537 பேருந்துகள் இயக்கம்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து இன்று 3,537 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி இன்று முதல் 13ம் தேதி வரை 4 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னையில் இருந்து தினமும் வழக்கமாக இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 சிறப்புப் பேருந்துகள் என 4 நாட்களுக்கு மொத்தம் 14,104 பேருந்துகளும், திருச்சி, கோவை உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து 7,800 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இதன் மூலம், பொங்கல் பண்டிகைக்காக 4 நாட்களுக்கு சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து மொத்தம் 21,904 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இன்று சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு 3,537 பேருந்துகளும், பிற முக்கிய நகரகங்களில் இருந்து 1,560 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்ல கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய 3 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இந்த இடங்களுக்கு செல்ல மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இணைப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. அதன்படி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்தும், கிழக்கு கடற்கரை , காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் மாநகர் பேருந்து நிலையத்தில் இருந்தும், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் மப்சல் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. பொங்கல் முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வர 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன், 5,290 சிறப்புப் பேருந்துகளும், பிற ஊர்களுக்கு 6,926 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று 3,537 பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: