வருசநாடு/மூணாறு: வருசநாடு மற்றும் மூணாறு பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியம் கடமலைக்குண்டு அருகே கொம்புக்காரன்புலியூர் கிராமத்தை ஒட்டி பாம்புச்சேரி மலையடிவாரம் உள்ளது. இப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை, முருங்கை உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பாண்டி என்பவரது தோட்டத்திற்கு புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்திவிட்டு சென்றன. தகவலறிந்து வந்த கண்டமனூர் வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் இரண்டாவது முறையாக இரண்டு தினங்களுக்கு முன் இரவு அப்பகுதியில் உள்ள சுதாகர், அண்ணாதுரை, மகேஸ்வரன், சின்னசென்ராயன் ஆகியோரது தோட்டங்களுக்குள் புகுந்த காட்டுயானைகள், சுமார் 25க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தின. இபோன்று இருதினங்களுக்கு முன்பு உப்புத்துரை மலையடிவாரத்தில் உள்ள மலைச்சாமி, சுந்தரம் ஆகியோரது தோட்டங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள், 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட இலவ மரங்களை சேதப்படுத்திவிட்டு சென்றன. இது குறித்தும் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மலைக்கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதே போல் கேரள மாநிலத்தின் பிரபல சுற்றுலா தலமான மூணாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுமாடுகள், யானைகள், புலி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இரவில், கன்னிமலை பகுதியில் நுழைந்த காட்டுயானை கூட்டம், அங்குள்ள பயிர்களை சேதப்படுத்தி விட்டு, மறுநாள் காலை 7 மணிக்கு மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றன. மேலும் தேயிலை தோட்ட பகுதியில் முகாமிட்டிருக்கும் காட்டு யானைகளால், தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அச்சத்தில் உள்ளனர். இதனால் அவர்களது இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக காட்டு யானை படையப்பா, குடியிருப்பு பகுதியிலும், சாலையோரங்களிலும் நடமாடுவதால், மூணாறு நகர் பகுதியில் வேலை முடிந்து வீடு திரும்ப முடியாமல் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். இதனால் எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், உடனடியாக காட்டு யானை அட்டகாசத்திற்கு தீர்வு காண வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வருசநாடு, மூணாறு பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: கவலையில் விவசாயிகள் appeared first on Dinakaran.