கள் இறக்கினால் கடும் நடவடிக்கை: பழநியில் மதுவிலக்கு டிஎஸ்பி எச்சரிக்கை

 

பழநி, ஜன. 10: பனை மரத்தில் கள் இறக்கி விற்பனை செய்யும் தொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பழநியில் நடந்த கூட்டத்தில் மதுவிலக்கு டிஎஸ்பி முருகன் எச்சரித்துள்ளார். பழநி அருகே பாலசமுத்திரம், ஆயக்குடி, பொருந்தல், கோதைமங்கலம், பெரியம்மாபட்டி, நெய்க்காரப்பட்டி பகுதிகளில் பனை மரங்கள் அதிகளவு உள்ளன. இங்கு பனை தொழிலாளர்கள் பதநீர் இறக்கும் தொழில் மற்றும் கருப்பட்டி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு பழநியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறை சார்பில் நேற்று சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. மதுவிலக்கு டிஎஸ்பி முருகன், இன்ஸ்பெக்டர் லாவண்யா ஆகியோர் விதிமுறைகளை மீறும் பனை தொழிலாளர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர். தொடர்ந்து பதநீர் இறக்கும் தொழிலாளர்கள் அதற்கான உரிமத்தை வைத்திருப்பவர்கள் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று புதுப்பித்து கொள்ள வேண்டும். உரிமம் புதுப்பிக்காத தொழிலாளர்கள் பதநீர் இறக்க கூடாது.

மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பனை மரத்தின் உரிமையாளர்களிடம் பதநீர் இறக்க சம்மத கடிதம் பெற்று இறக்க வேண்டும். பதநீருக்கு பதிலாக போதை தரக்கூடிய கள் என்ற பானத்தை இறக்கி விற்பனை செய்ய கூடாது. கள் விற்பனை செய்பவர்கள் மீது நீதிமன்ற காவல் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எடுத்துரைக்கப்பட்டது. இதில் பனை தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post கள் இறக்கினால் கடும் நடவடிக்கை: பழநியில் மதுவிலக்கு டிஎஸ்பி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: