ஆரணி, ஜன.10: ஆரணி அருகே மின்கம்பம் மீது அரசு பஸ் ேமாதிய விபத்தில் 5 பயணிகள் காயம் அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் இருந்து 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு டவுன் பஸ் நேற்று ஆரணி அடுத்த வடமாதிமங்கலம், மண்டகொளத்தூர் வழியாக தச்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. தொடர்ந்து, கூடலூர் கிராமம் அருகே வந்தபோது, எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக டிரைவர் சாலையோரம் பஸ்சை இறக்கினார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் குடிநீர் பைப்லைன் அமைக்க தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் இறங்கியது. மேலும், அருகில் உள்ள மின்கம்பத்தின் மீது மோதியது.
இதனால் மின்கம்பம் துண்டாக உடைந்து பஸ் மீது விழுந்தது. மின்கம்பிகளும் அறுந்து பஸ் மீது விழுந்ததால், பஸ்சில் பயணித்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து கத்தி கூச்சலிட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த பொதுமக்கள் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த விபத்தில் 5க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்டு தச்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த களம்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, 2 மணி நேரத்திற்கு பிறகு அரசு பஸ்சை மீட்டு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
The post அரசு பஸ் மின்கம்பம் மீது மோதி விபத்து 5 பயணிகள் காயம் ஆரணி அருகே பரபரப்பு appeared first on Dinakaran.