ஹாலிவுட் நகரமான லாஸ்ஏஞ்சல்ஸ் 3வது நாளாக பற்றி எரிகிறது: அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலரின் வீடுகள் நாசம், 2 கோடி மக்கள் பாதிப்பு; நடிகர், நடிகைகள் வெளியேற்றம்

லாஸ்ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் ஹாலிவுட் நகரமான லாஸ்ஏஞ்சல்ஸ் நகரம் 3 நாளாக தீப்பற்றி எரிகிறது. இதனால் 5 பேர் பலியாகி விட்டனர். 2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 5 முக்கிய பகுதிகளில் பெரும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. ஜன.7ல் பற்றிய தீ அங்கு வீசிய காற்றால் மிகவேகமாக பரவியது. தொடர்ந்து 3 நாட்களாக தீ வேகமாக பரவி வருகிறது. இதனால் ஹாலிவுட் நகரான ஹாலிவுட் ஹில்ஸ் உட்பட பல முக்கியமான பகுதிகளில் இருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டது.

1.30 லட்சம் மக்கள் அந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹாலிவுட் நட்சத்திரங்கள் அதிகமாக வசித்து வரும் பகுதிகளிலும் தீ பரவி வருகின்ற சூழல் காரணமாக, அவர்களது வீடுகளும் தீயில் எரிந்து சாம்பலானது. குறிப்பாக பாரிஸ் ஹில்டன், பில்லி கிறிஸ்டல், மாண்டி மூரே, ஜேமியிலி கார்டிஸ் உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்கள் பலரின் வீடுகள் தீக்கிரையாகியுள்ளது. அதேபோல், ஆடம் சாண்ட்லர், பென் அப்லெக், டாம் ஹான்க்ஸ் மற்றும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் போன்றோரின் வீடுகளும் காட்டுத்தீ பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ளன.  லாஸ்ஏஞ்சல்ஸ் பகுதியில் மட்டும் சுமார் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தீ பரவியுள்ளது.

தற்போது தீயை அணைக்கப் போதுமான தண்ணீர் இன்றி அதிகாரிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் ஏற்படும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முன் அனுபவம் ஏதுமின்றி உள்ள தீயணைப்பு துறையினர் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் கட்டுப்பாடு இல்லாமல் பரவி வரும் காட்டுத்தீக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்டு தோறும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நடைபெறும் டோல்பி தியேட்டரும் சன்செட் தீ தாக்கும் அபாயத்தில் உள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் வரலாற்றில் இந்த தீ விபத்துதான் மிகவும் மோசனமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சுமார் 1.70 கோடி மக்கள் புகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 லட்சம் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிக்கிறார்கள். வெண்டியுரா கவுன்டியில் சுமார் 3,34,000 மக்களும், லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்டியில் 9,57,000 பேரும் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

லாஸ்ஏஞ்சல்ஸ் பகுதியில் வசிக்கும் ஏராளமான அமெரிக்கா வாழ் இந்தியர்கள் வீடுகளும் தீயில் நாசம் அடைந்துள்ளது. அவர்களும் வீடுகளை விட்டு குடும்பத்துடன் வெளியே வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். தீயை அணைக்கும் பணியில் ஹெலிகாப்டர்கள், விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தத்தில் இந்த தீ விபத்து அமெரிக்காவையே உலுக்கி விட்டது.

* பைடன் மீது டிரம்ப் தாக்கு
அமெரிக்க அதிபர் பைடனும், கலிபோர்னியா ஆளுநரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தவறி விட்டனர் என்று புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், ‘தீயணைப்பு இயந்திரங்களில் தண்ணீர் இல்லை, பணம் இல்லை. இதைத்தான் பைடன் எனக்கு விட்டுச்செல்கிறார். நன்றி ஜோ’ என்று தெரிவித்துள்ளார்.

* இத்தாலி பயணத்தை ரத்து செய்தார் பைடன்
அமெரிக்க அதிபராக தனது கடைசி பயணமாக இத்தாலி செல்ல பைடன் திட்டமிட்டு இருந்தார். ஆனால் லாஸ்ஏஞ்சல்ஸ் பேரழிவு காரணமாக அவர் தனது இத்தாலி பயணத்தை ரத்து செய்துள்ளார்.

The post ஹாலிவுட் நகரமான லாஸ்ஏஞ்சல்ஸ் 3வது நாளாக பற்றி எரிகிறது: அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலரின் வீடுகள் நாசம், 2 கோடி மக்கள் பாதிப்பு; நடிகர், நடிகைகள் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: