ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை இன்று (10ம் தேதி) முதல் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான, மாநகராட்சி ஆணையரிடம் அவரது அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 17ம் தேதி. இதில், அரசு விடுமுறை தினங்கள் நீங்கலாக, அதாவது 10ம் தேதி, 13ம் தேதி, 17ம் தேதி ஆகிய 3 நாட்களில் மட்டுமே காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.
இதில், பொது பிரிவு வேட்பாளர்களாக போட்டியிடுபவர்கள் ரூ.10 ஆயிரமும், எஸ்சிஎஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள் ரூ.5 ஆயிரமும் ரொக்கமாக செலுத்தி வேட்பு மனுத்தாக்கல் செய்ய வேண்டும். வேட்பாளர் உட்பட 5 பேருக்கு மட்டும் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் இடத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளர் மற்றும் அவருடன் வர 3 கார்களுக்கு அனுமதி உள்ளது. இந்த 3 கார்களும் 200 மீட்டருக்கு அப்பாலும், வேட்பாளரின் ஒரு கார் மட்டும் 100 மீட்டர் வரையும் அனுமதிக்கப்படும். வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்கும் வகையில், மாநகராட்சி அலுவலகத்தின் சுற்றுப்புறத்தில் 4 திசைகளிலும் 100 மீட்டர், 200 மீட்டர் எல்லைக்கோடு போடப்பட்டு உள்ளது.
மேலும், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் போலீஸ் அதிகாரிகள், தேர்தல் பிரிவு அதிகாரிகள் வேட்பாளர்கள் விதிமுறைகளை கடைபிடிக்கிறார்களா? என்பதை கண்காணிக்க சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், வேட்பு மனு தாக்கல் படிவம், கட்டணம் ஆகியவற்றை சரிபார்த்து பெற தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான மேஜைகளும், வேட்பாளர்கள் மற்றும் உடன் வருபவர்கள் படிவத்தை பூர்த்தி செய்ய இருக்கைகளும் மாநகராட்சி ஆணையர் அலுவலகம் முன் போடப்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்க உள்ளதையொட்டி, அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்து, மாநகராட்சி அலுவலகம் தயார் நிலையில் உள்ளது. வேட்பு மனு தாக்கலையொட்டி ஈரோடு டவுன் டிஎஸ்பி முத்துக்குமரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வேட்புமனு தாக்கல் நிறைவடையும் வரை போலீஸ் பாதுகாப்பு தொடரும்’’ என்றனர்.
* பாதுகாப்புக்கு 5 கம்பெனி துணை ராணுவம்
கடந்த ஜனவரி 6ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க ஏதுவாக 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் உள்ளன. தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகமும், தேர்தல் பிரிவு ஊழியர்களும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, காவல் துறையும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு பணிக்கு 5 கம்பெனி துணை ராணுவம் ஒதுக்கீடு செய்யக்கோரி, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மூலமாக தேர்தல் ஆணையத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்கு பறக்கும் படைகள் 3 அமைக்கப்பட்டு, தலா ஒரு எஸ்ஐ உட்பட 3 போலீசார் 3 ஷிப்ட்டுகளாக பணியாற்றி வருகின்றனர். தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கும், வாக்குப்பெட்டி வைத்துள்ள ‘ஸ்டிராங்க் ரூம்’ பாதுகாப்புக்கு துணை ராணுவத்தினர் ஈடுபட உள்ளனர். இதற்காக 2023ம் ஆண்டு இடைத்தேர்தலை போலவே 5 கம்பெனி துணை ராணுவத்தினர் ஒதுக்கீடு செய்யக்கோரி மாவட்ட தேர்தல் அலுவலர் மூலமாக தேர்தல் ஆணையத்திற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு கம்பெனிக்கு சராசரியாக 90 துணை ராணுவத்தினர் என மொத்தம் 450 துணை ராணுவ படையினர் இருப்பார்கள். 2023ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலின்போது, 34 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக இருந்தது. அதே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிழக்கு தொகுதியில் 14 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக இருந்தது. தற்போது, பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியும் பணி நடந்து வருகிறது. ஓரிரு நாளில் இறுதியாகும். தேர்தல் வாக்குப்பதிவின்போது பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு துணை ராணுவ பாதுகாப்பும், கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
The post இன்று முதல் வேட்பு மனு தாக்கல் வேட்பாளர்களுக்கு கட்டுப்பாடுகள் appeared first on Dinakaran.