பெரியார் குறித்து சீமான் சர்ச்சை அண்ணாமலை ஆதரவு பேச்சு

கோவை: பெரியார் குறித்து சீமான் தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு அண்ணாமலை ஆதரவு கொடுத்து பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை விமான நிலையத்தில் பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பெரியார் குறித்து சீமான் சொன்னது சரிதான். பெரியார் அதுபோன்று பேசியிருக்கிறார். அதற்கான ஆதாரங்களை நான் தருகிறேன். ஆனால், அதை பொதுவெளியில் பேச வேண்டிய அவசியம் இல்லை. பொதுமக்கள் அரசியலை மற்றொரு கண்ணோட்டத்தில் பார்க்கத் துவங்கி உள்ளனர். சீமான் ஏன் அப்படி சொன்னார் என்பதை அவர்தான் சொல்ல வேண்டும். கோவை உடையாம்பாளையத்தில் பீப் கடை விவகாரத்தில் பாஜ நிர்வாகி மீது போட்டுள்ள வழக்கை, சட்ட ரீதியாக சந்திப்போம். யுசிஜி விவகாரத்தில் பிப்ரவரி 5ம் தேதி வரை கருத்துகளை அனுப்ப மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

* ஆர்ப்பாட்டத்தில் பாஜவினர் பிக்-பாக்கெட்
பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் ஒன்றியம் கொடுவாயில் பாஜ சார்பில், சேமலைக்கவுண்டம்பாளையத்தில் 3 பேர் படுகொலை சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க வலியுறுத்தியும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், ‘சேமலைக்கவுண்டம்பாளையத்தில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டு 42 நாட்கள் ஆகியும் குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடித்து கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கை ஒன்றிய அரசின் சிபிஐக்கு மாற்ற வேண்டும். இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும். இதற்காக 50 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெற்று ஆளுனரிடம் நேரில் வழங்கவுள்ளோம்’ என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஒன்றிய பாஜ நிர்வாகி ஆறுமுகத்தின், வேட்டி பையில் இருந்த ரூ.30 ஆயிரத்தை பிளேடு போட்டு கிழித்து பிக்-பாக்கெட் அடித்துவிட்டனர். இது பற்றி அவர் அவினாசிபாளையம் போலீசாரிடம் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜவினர் யாரோதான் பணத்தை அபேஸ் செய்திருக்கக்கூடும் என தெரிகிறது. போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post பெரியார் குறித்து சீமான் சர்ச்சை அண்ணாமலை ஆதரவு பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: