- உயர் நீதிமன்றம்
- தேர்தல் ஆணையம்
- இபிஎஸ்
- அஇஅதிமுக
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- எடப்பாடி பழனிசாமி
- பொது
- தின மலர்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அளிக்கப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளில் முடிவு காணும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்று ரவீந்திரநாத் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரரின் கோரிக்கை நான்கு வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட உயர் நீதிமன்றம், நான்கு வாரங்களில் மனுவை தேர்தல் ஆணையம் பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்க கூடாது என்று முன்னாள் எம்.பி ரவீந்திரநாத் மற்றும் கே.சி.பழனிச்சாமி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தனர். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 24ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் ஆஜராகி, தேர்தல் ஆணையம் நீதித்துறை போல் செயல்பட முடியாது. இந்த விவகாரம் தொடர்பான வழக்குகள் சிவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. பொதுச்செயலாளர் தேர்வு குறித்து ஏற்கனவே நீதிமன்றம் முடிவெடுத்துள்ள நிலையில் தேர்தல் ஆணையம் இந்த பிரச்னை குறித்த விசாரிக்க முடியாது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு, கட்சி விதிகளில் திருத்தம் தொடர்பான விவகாரங்கள் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் வரும் 27ம் தேதி பதில்தர உத்தவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
The post அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வை எதிர்த்த மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.