அவர் பேசியதாவது:‘வறியவர்க்கெல்லாம் கல்வியின் வாடை, வரவிடவில்லை மதக்குருக்களின் மேடை, நறுக்கத் தொலைந்தது அந்த நாட்பட்ட பீடை, நாடெல்லாம் பாய்ந்தது கல்வி நீரோடை’ என்று பாடினார் பாவேந்தர் பாரதிதாசன். அந்த கல்வி நீரோடையை மீண்டும் தடுக்க எல்லா வகையிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். எல்லோரும் படித்து, எல்லோரும் வேலைக்கு போய், எல்லோரும் தலைநிமிர்வது பிடிக்காதவர்களால் தொடர்ச்சியாக கல்வி துறையில் தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. பள்ளி கல்வியை சிதைப்பதற்காகவே புதிய தேசிய கல்வி கொள்கையை கொண்டு வந்து திணிக்கிறார்கள். அரசு பொதுத்தேர்வு என்ற பெயரால் வடிகட்டி, வடிகட்டி அனைவரையும் கல்வியை தொடர முடியாமல் செய்யப் போகிறார்கள். அதனை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து கொண்டிருக்கிறது.
‘நீட்’ தேர்வு மூலமாக மருத்துவ கனவை சிதைக்கும் காரியத்தை பல ஆண்டுகளாக செய்து வருகிறார்கள். தங்கை அனிதா உள்ளிட்ட எத்தனையோ உயிர்களை நாம் இழந்தோம். ஆனால், ஆண்டுதோறும் ஆள்மாறாட்டம், வினாத்தாள் ‘லீக்’, மதிப்பெண் குளறுபடி என்று எல்லா முறைகேடும் நடப்பதில் ‘நம்பர் ஒன்’ தேர்வாக ‘நீட்’ தேர்வு இருக்கிறது. இதேபோல, பல்கலைக்கழகங்களையும் சிதைக்கும் முயற்சியை ஒன்றிய அரசு தொடங்கிவிட்டது. துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்படும் தேர்வுக்குழுவை கவர்னரே தீர்மானிப்பார் என்று யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறை வகுத்துள்ளது.
துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை கவர்னர் கையில் கொடுப்பது, பல்கலைக்கழகங்களை சிதைக்கும் காரியமாகத்தான் இருக்க முடியும். அதற்காகத்தான் இப்படி செய்யப்போகிறார்கள். இந்த விவகாரத்தில் ஏற்கனவே தமிழ்நாடு அரசுக்கும், கவர்னருக்கும் கருத்து மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது. துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் தேர்வு குழுவில் யுஜிசி பரிந்துரை செய்யும் உறுப்பினர்களை கவர்னர் நியமித்தார். நாம் அதனை ஏற்கவில்லை. இந்த மோதலுக்கு ஆக்கப்பூர்வமான தீர்வு எட்டப்படாத நிலையில், தன்னிச்சையாக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிக அதிகாரங்களை கவர்னர்களுக்கு வழங்குவது சரியுமல்ல, முறையுமல்ல.
இவர்களாக ஒரு உத்தரவை போட்டுவிட்டு, இதனை அமல்படுத்தாத கல்வி நிறுவனங்கள் யுஜிசி திட்டங்களில் பங்கேற்க முடியாது என்று சொல்வது அநியாயம் அல்லவா? அதுவும், பட்டங்களை வழங்க முடியாது என்பது பகிரங்கமான மிரட்டல் அல்லவா? வேறு எதை அது எடுத்துக்காட்டுகிறது? மாநில அரசுகள் தங்கள் வளத்தில், பொருளாதார பலத்தில் கட்டிய பல்கலைக்கழகங்களை அபகரித்துக் கொள்கிற அக்கிரமமான முயற்சியாகவே இதனை கருத வேண்டி இருக்கிறது. இந்த விதிமுறை கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது, மாநில உரிமைகளில் தலையிடுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை சிறுமைப்படுத்தும் செயல்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களிடம் தான் கல்வி தொடர்பான அதிகாரம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான், அனைத்து மக்களுக்குமான கல்வியை முழுமையாக கொடுக்க முடியும். நியமன பதவிகளில் ஒருசில ஆண்டுகள் இருந்துவிட்டு போய் விடுபவர்களுக்கு ஒரு மாநில மக்களின் அடிப்படை உணர்வை புரிந்துகொள்ள இயலாது. ஒன்றிய அரசு கல்வி துறையில் எதைச் செய்ய வேண்டுமோ அதை செய்வது இல்லை. வரம்பற்ற கட்டணம், இடஒதுக்கீடு இல்லாத தன்மை என வரம்பு மீறும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு கடிவாளம் போடுவதற்கு சிறு துரும்பும் கிள்ளிப்போட மறுக்கும் ஒன்றிய அரசு, தனது பட்ஜெட்டில் உயர் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துக் கொண்டே வரும் ஒன்றிய அரசு;
கல்வித்துறை சார்பில் தமிழ்நாட்டில் ஐஐடி, ஐஐஎம் மத்திய பல்கலைக்கழகம் போன்ற ஒரேயொரு புதிய உயர்கல்வி நிறுவனத்தை கூட அமைக்காத ஒன்றிய அரசு, ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோரது சட்டப்படியான ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிய ஒன்றிய அரசு; மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்வது கெடுநோக்கம் கொண்டது; சுயநலமானது. நிச்சயமாக மாணவர் நலனை மனதில் கொண்டோ, கல்வித் தரத்தை மேம்படுத்தவோ இந்த முயற்சி நடைபெறவில்லை.
ஒரு தன்னாட்சி பெற்ற தனியார் கல்லூரியே பாடத்திட்டம் வகுத்து பட்டமும் வழங்கலாம் என்ற நிலையை ஏற்படுத்திவிட்டு, நூற்றாண்டு பெருமை கொண்ட கல்லூரிகளை அபகரிக்க எத்தனிப்பது அதிகார எதேச்சதிகாரம். தலைசிறந்த கல்வி நிறுவனங்களை நாட்டிலேயே அதிக அளவில் கொண்டிருக்கும் தமிழ்நாடு, நமது கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது; அப்படி இருக்கவும் முடியாது. கல்வியையும், மக்களையும் காக்க, எதிர்கால தலைமுறையை காக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியாக வேண்டும். இந்த தீர்மானத்தை ஏற்று ஒன்றிய அரசு மனம் மாறாவிட்டால் மக்கள் மன்றத்தையும் நீதிமன்றத்தையும் நாடுவோம் என்ற முன்னுரையுடன் இந்த தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.
‘‘பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக சமீபத்தில் பல்கலைக்கழக நிதிநல்கை குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வேண்டுமென இப்பேரவை கருதுகிறது. அதேபோல் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் கற்கை முறைகளுக்கான குறைந்தபட்ச வரைவு நெறிமுறைகள், 2024 மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆசிரியர்கள், கல்வி பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்து வெளியிட்ட வரைவு நெறிமுறைகள், 2025 ஆகியன தேசிய கல்விக் கொள்கை, 2020ன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக நிதிநல்கை குழுவின் இத்தகைய நடவடிக்கைகள் இந்திய அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை கோட்பாடான கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது மட்டுமல்ல; தமிழ்நாட்டின் உயர் கல்வி முறைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் சமூகநீதி கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வலுவான உயர் கல்வி கட்டமைப்பை இந்த வரைவு நெறிமுறைகள் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாலும், தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும் என்பதாலும் பல்கலைக்கழக நிதிநல்கை குழுவின் இந்த 2 வரைவு நெறிமுறைகளையும், துணைவேந்தர் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வரைவு நெறிமுறைகளையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசின் கல்வி துறையை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.” இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதை தொடர்ந்து அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் இந்த அரசினர் தனித் தீர்மானம் தொடர்பாக தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அதன்படி, உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன், உறுப்பினர்கள் எழிலரசன் (தி.மு.க.), அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (அதிமுக), ராஜேஷ்குமார் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), முகமது ஷாநவாஸ் (விசிக), சின்னதுரை (மா.கம்யூ.), மாரிமுத்து (இ.கம்யூ), சதன் திருமலைக்குமார் (மதிமுக), அப்துல் சமது (மமக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக), பூவை ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்) ஆகியோர் அரசினர் தனி தீர்மானத்தை வரவேற்று, ஆதரித்து பேசினார்கள்.
சட்டமன்ற பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் அரசினர் தனி தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், தங்கள் கட்சி உறுப்பினர்களுடன் வெளிநடப்பும் செய்தார். அதன்பிறகு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘”இங்கே பேசிய உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை ஆணித்தரமாக, அரசினர் தனி தீர்மானத்துக்கு வலுசேர்க்கும் வகையில் பேசினார்கள். அவர்களுக்கு நன்றி. பாஜ உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மட்டும் பட்டும் படாமல் பேசிவிட்டு வெளிநடப்பு செய்துள்ளார். இந்த தனி தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார். இதை தொடர்ந்து, சபாநாயகர் மு.அப்பாவு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானத்தை குரல் வாக்கெடுப்புக்கு விட்டார். குரல் வாக்கெடுப்பின் மூலம் அரசினர் தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
* தலைசிறந்த கல்வி நிறுவனங்களை நாட்டிலேயே அதிக அளவில் கொண்டிருக்கும் தமிழ்நாடு, நமது கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது, அப்படி இருக்கவும் முடியாது.
* கல்வியையும், மக்களையும் காக்க, எதிர்கால தலைமுறையை காக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியாக வேண்டும். இந்த தீர்மானத்தை ஏற்று ஒன்றிய அரசு மனம் மாறாவிட்டால் மக்கள் மன்றத்தையும் நீதிமன்றத்தையும் நாடுவோம்.
The post பல்கலைக்கழகங்களை அபகரிக்க ஒன்றிய அரசு திட்டம் யுஜிசி அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் appeared first on Dinakaran.