எது இல்லை என்றாலும் எல்லா இடங்களிலும் இன்டர்நெட் தேவை என்ற நிலை உருவாகி விட்டது: ஐடி உச்சி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: எது இல்லை என்றாலும் பரவாயில்லை, இன்டர்நெட் அனைத்து இடங்களிலும் இருக்க வேண்டும் என்கிற நிலை உருவாகிவிட்டது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஐ.டி. துறை வளர மனித வளங்கள் மிக முக்கியம். அதற்காகத்தான் என்னுடைய கனவுத்திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தை உருவாக்கினேன். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மென்திறன், தொழில் சார்ந்த திறன்களை அளிப்பதில் அந்த திட்டம் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழ் மென்பொருள்கள் உருவாக்கவும் மிகுந்த முக்கியத்துவம் அளித்துக் கொண்டு வருகிறோம். தமிழ்க் கணிப்பொறிக்கான டிஜிட்டல் வடிவங்களைத் தரப்படுத்தும் யுனிகோட் கன்சார்ட்டியத்தில் நிறுவன உறுப்பினர் நிலையில், தமிழ்நாடு அரசின் பிரதிநிதியாக தமிழ் இணையக் கல்விக் கழகம் விளங்குகிறது.

இன்டர்நெட்டில் தமிழ் மொழி குறித்த பொருண்மைகளை மேம்படுத்த உதவவேண்டும் என்று பிழைதிருத்தி, கிராமர் அனலைசர், உரை திருத்தி போன்ற நிறைய மென்பொருள்களை தமிழ் இணையக் கல்விக் கழகம் உருவாக்கியிருக்கிறது. தமிழ்ப் பொருண்மைகள் அடிப்படையில், ஏஐ தொடர்பான முயற்சிகளுக்கு என்எல்பி கருவிகளும் உருவாக்கப்பட்டு வருகிறது. இதெல்லாம் செய்தால் மட்டும் போதுமா? இல்லை! அதனால்தான், சைபர் செக்யூரிட்டிக்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம். இதற்காக, 2024ம் ஆண்டில் ‘சைபர் செக்யூரிட்டி பாலிசி 2.0’-வை வெளியிட்டோம். சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கான சைபர் செக்யூரிட்டி தொழில்நுட்ப உதவிப் பிரிவையும் ஏற்படுத்துவோம். அரசின் அனைத்து சேவைகளும் ஆன்லைனில் வழங்கப்பட வேண்டும்.

2021ம் ஆண்டில் 14,927-ஆக இருந்த இ-சேவை மையங்கள் 2024ம் ஆண்டு முடிவில் 33,554 என்ற அளவுக்கு இரண்டு மடங்குக்கு மேல் உயர்ந்திருக்கிறது. எது இல்லை என்றாலும் பரவாயில்லை, இன்டர்நெட் அனைத்து இடங்களிலும் இருக்கவேண்டும் என்கிற நிலை உருவாகிவிட்டது. அதற்காகத்தான், சென்னையில் இருக்கும் கடற்கரைகள், பேருந்து முனையங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் பொது மக்கள் இணைய வசதியை எளிதாக பயன்படுத்த 1,204 இலவச வை-பை பாயிண்ட்டுகளை நிறுவியிருக்கிறோம். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், ஒத்துழைப்பு மற்றும் உதவிகளை வழங்க, ‘சிறப்பு உதவி மையம்’ ஒன்றை எல்காட் நிறுவ இருக்கிறது. இது டிஜிட்டல் யுகம்! இனி, மக்களுடைய அனைத்து பயன்பாடுமே டிஜிட்டல் வழியாகதான் இருக்கும். இந்தப் பயன்பாடு எளிமையாக அனைவரும் பயன்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த், மின்னாளுமை இயக்குனர் மற்றும் தமிழ்நாடு மின்னாளுமை முகமை தலைமை நிர்வாக அலுவலர் கோவிந்த ராவ், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ரமண சரஸ்வதி, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வைத்திநாதன், இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் நந்தினி, நிறுவன முதன்மை செயல் அலுவலர் விஜயகுமார், இந்தியா நிறுவனத் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் இப்ஸிதா தாஸ் குப்தா, இந்திய மென் பொருள் தொழில்நுட்ப பூங்கா இயக்குநர் அரவிந்த குமார், பல்வேறு நாடுகளின் தூதரக அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* கோவையில் தகவல் தொழில்நுட்பவெளி
ஏஐ-க்காக கோவையில் அரசு-தனியார் கூட்டாண்மை முறையில் 2 மில்லியன் சதுர அடியில் ‘தகவல் தொழில்நுட்ப வெளி’-யை நிறுவப் போகிறோம். அதுமட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் இருக்கும் 900க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் பயனடையும் வகையில் நம்முடைய அரசு செயல்பட்டு வருகிறது. 2000க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறோம். இதற்கான தொழில்நுட்பக் கொள்கை ஒன்றை உருவாக்கப் போகிறோம் என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறோம். அதுவும் விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

The post எது இல்லை என்றாலும் எல்லா இடங்களிலும் இன்டர்நெட் தேவை என்ற நிலை உருவாகி விட்டது: ஐடி உச்சி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: