×

பெரியார் பற்றி அவதூறு பேச்சு சீமான் மீது வழக்குப்பதிவு: முற்றுகையிட முயன்ற பெதிகவினருடன் நாதக மோதல்

வடலூர்: பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே புதுச்சேரியில் சீமானை முற்றுகையிட முயன்ற பெரியார் திகவினருக்கும், நாதகவினருக்கும் இடையே மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் பங்கேற்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, பெரியார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்தார்.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தது. இந்நிலையில் திராவிடர் கழகத்தை சேர்ந்த கடலூர் மாவட்ட தலைவர் தண்டபாணி தலைமையில் கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வடலூர் போலீசார் சீமான் மீது பொது இடத்தில் அமைதியை குலைக்கும் விதமாக பேசுவது, இருபிரிவினருக்கு இடையே கலவரத்தை தூண்டும் விதமாக பேசுவது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரி நாதக கட்டமைப்பு மற்றும் தொடர் செயல்பாடுகள் கலந்தாய்வு கூட்டம் குயவர்பாளையம் லெனின் வீதியில் உள்ள மகாலில் நேற்று காலை 11 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதில் கட்சின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொள்வதாக அறிவித்து இருந்தனர். பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமானை கண்டித்தும், அவதூறாக பேசியதற்கு ஆதாரம் காட்டக் கோரியும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் முற்றுகை போராட்டம் அறிவித்தனர். இதையொட்டி, காலை 10.30 மணி அளவில் திருமண மண்டபம், சுப்பையா சிலை அருகே தபெக தலைவர் வீரமோகன், துணை தலைவர் இளங்கோ உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் திரண்டனர். சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்தால், நாங்களும் பதிலுக்கு போராட்டம் நடத்துவோம் என நாதகவினர் தெரிவித்தனர். இதனால் 30க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

திருமண மண்டபம் செல்லும் வழியில் மணிமேகலை அரசு பள்ளி அருகே பேரிகார்டு அமைத்து தடுப்பு அமைத்து இருந்தனர். இதற்கிடையே பெரியார் திகவினர் மற்றும் போராட்டக்குழுவினர் சீமான் படத்தை காலணியால் அடித்து கோஷமிட்டபடியே ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது அங்கு நடப்பட்டிருந்த நாதக கொடி கம்புகள், கொடிகளை பிடுங்கி எறிந்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியபோது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ஒரு பெண் உள்பட 36 பேரை கைது செய்து வேனில் ஏற்றினர்.

இதற்கிடையே, சீமானை வரவேற்க திருமண மண்டபம் அருகே காத்திருந்த நாதகவினர், பேரிகார்டு தடுப்புகளையும், போலீசாரையும் தள்ளிவிட்டு, வேனில் கைதாகி இருந்த பெரியார் திகவினரை நோக்கி சென்றனர். இதையறிந்த வேனில் இருந்த அவர்களும் தாக்குதலை எதிர்கொள்ள தயாராக இருந்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது. பின்னர் போலீசார், நாதகவினரை விரட்டிப் பிடித்து மண்டபத்துக்கு போக செய்தனர். இதனை தொடர்ந்து 11.05க்கு மண்டபத்துக்கு சீமான் வந்தார். தொடர்ந்து, கட்சியின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

* சீமான் மீண்டும் சர்ச்சை
புதுச்சேரியில் சீமான் நிருபர்களிடம் கூறுகையில், ‘அம்பேத்கருடன், பெரியாரை ஏன் ஒப்பிடுகிறீர்கள்? இருவரின் சிந்தனையும் ஒன்றா? இருவரது சிலைகளையும் ஒன்றாக வைத்தால் ஒன்றாகி விடுமா? அம்பேத்கர் உலகில் ஆகச்சிறந்த கல்வியாளர். உலகப் பொதுமைக்காக பேசியவர். இவர் யார்? தான் தோன்றியதெல்லாம் பேசிவிட்டு போனார். நாங்கள் வெளியிட்டுள்ள ஆதாரம் போதவில்லையென்றால், பெரியார் எழுத்துக்களை அரசுடைமையாக்கிவிட்டு என்னிடம் ஆதாரம் கேளுங்கள், நான் தருகிறேன். எங்கள் மூதாதையர் வள்ளலார், வைகுந்தரை தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்து விட்டார்?. காலத்திற்கேற்ப கொள்கை மாறுகிறது. பெரியாரை எதிர்ப்பதுதான் எனது கொள்கை’ என்றார்.

The post பெரியார் பற்றி அவதூறு பேச்சு சீமான் மீது வழக்குப்பதிவு: முற்றுகையிட முயன்ற பெதிகவினருடன் நாதக மோதல் appeared first on Dinakaran.

Tags : Seeman ,Periyar ,Nathak ,Bedikas ,Vadalur ,Nathaks ,Puducherry ,Dinakaran ,
× RELATED பெரியார் குறித்து சீமான் சர்ச்சை அண்ணாமலை ஆதரவு பேச்சு