புழல்: செங்குன்றம் பைபாஸ் சாலை சிக்னலில் இருந்து செல்லும் செங்குன்றம், மாதவரம் மாநில நெடுஞ்சாலை பாப்பாராம் மேடு, வடகரை, கிரான்ட் லைன், வடபெரும்பாக்கம், மாதவரம், மஞ்சம்பாக்கம், மாத்தூர், மணலி வரை பைப்லைன் மூலம் குடிநீர் செல்கிறது. இந்நிலையில், வடகரை முதல் கிரான்ட் லைன் வரை சுமார் 2 கிமீ தூரத்தில் பூமிக்கு அடியில் செல்லும் குடிநீர் பைப்புகள் உடைப்பு ஏற்பட்டு, வடகரை அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப்பள்ளி, வடகரை அழிஞ்சிவாக்கம் சந்திப்பு கிராண்ட் லைன் மாரியம்மன் கோயில் ஆகிய பகுதிகளில் தண்ணீர் வீணாக நெடுஞ்சாலையில் சென்று ஆங்காங்கே தேங்கியுள்ளதால், சாலை குண்டும் குழியுமாக மாறி வருகிறது. இதனால், இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், குறிப்பாக பைக்கில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். ஒரு சில நேரங்களில் விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைகின்றனர். இதுகுறித்து, வடகரை கிரான்ட் லைன் பகுதி கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும், சென்னை குடிநீர் வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும், கண்டும் காணாமல் உள்ளனர். இதனால் குடிநீரும் வீணாகிறது, சாலையும் பாழடைந்து வருகிறது.
எனவே, உடைந்துபோன குடிநீர் பைப்புகளை சரிசெய்ய வேண்டும், இல்லையெனில் செங்குன்றம் பைபாஸ் சாலை சிக்கனலில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கடந்த சில மாதங்களாக பெய்து வந்த மழையால் செங்குன்றம் பைபாஸ் சாலையில் இருந்து செல்லும் பாப்பார மேடு, வடகரை, கிரான்ட்லைன் வரை சுமார் 2 கிமீ தூரத்தில் சாலைகள் பழுதடைந்தது. தற்போது பூமிக்கு அடியில் செல்லும் சென்னை குடிநீர் பைப்புகள் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி இருப்பதால் சாலைகள் குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறியுள்ளது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, உடைப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் உடனடியாக சரிசெய்து சாலைகளை பாதுகாக்க வேண்டும் என்றனர்.
The post சென்குன்றம் வடகரை – கிரான்ட்லைன் இடையே குடிநீர் பைப்லைன் உடைந்ததால் குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.