பூந்தமல்லி தொகுதியில் மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும்; பேரவையில் ஆ.கிருஷ்ணாமி எம்எல்ஏ வலியுறுத்தல்

திருவள்ளூர்: சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி (திமுக) பேசுகையில், பூந்தமல்லி தொகுதியில் மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரி தொடங்க அரசு ஆவன செய்யுமா? என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், \” திருவள்ளூரில் ஏற்கனவே ஒரு மருத்துவக் கல்லூரி இயங்கிக் கொண்டிருப்பதால், அங்கே புதிதாக மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட வேண்டிய அவசியமில்லை\” என்றார். ஆ.கிருஷ்ணசாமி: பூந்தமல்லி என்பது சென்னையின் மேற்கு நுழைவாயில், அது ஒரு மிகப்பெரிய ஜங்ஷன். அந்த இடத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு போட்டியாக ஓர் அரசு மருத்துவக் கல்லூரியைக் கட்டினால் மிகச் சிறப்பாக இருக்கும். இருந்தாலும், சிறிது காலம் கடந்தாவது, அதைக் கட்டித் தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 2021ம் ஆண்டு பூந்தமல்லியில் பொது மருத்துவமனை கட்டுவதற்காக 9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

அதற்கு இடம் தேர்வு செய்வதிலே சில சங்கடங்கள் ஏற்பட்டு, வழக்கு தாக்கல் செய்துவிட்டனர். இப்போது இடம் தயாராக இருக்கிறது. ஆனால், அந்த நிதியைப் பயன்படுத்தாமல், நிதி மீண்டும் அரசுக்கு போய்விட்ட காரணத்தினால், அதைக் கட்டித் தரமுடியுமா? அமைச்சர் மா.சுப்பிரமணியன்: சட்டமன்ற உறுப்பினர் சொல்லி இருப்பதைப்போல, அவருடைய சட்டமன்றத் தொகுதியில் ஏற்கனவே ரூ.7.15 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வகையான அரசு நல வாழ்வு மையங்கள், நகர்ப்புற நல வாழ்வு மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான புதிய கட்டிடங்கள், துணை சுகாதார நிலையங்கள் என ஏராளமான கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. இன்னமும் சுமார் ரூ.7 கோடி செலவில் பல்வேறு கட்டிட பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

 

The post பூந்தமல்லி தொகுதியில் மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும்; பேரவையில் ஆ.கிருஷ்ணாமி எம்எல்ஏ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: