கட்டி முடிக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராத அங்கன்வாடி மையம்: உடனே திறக்க வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் ஊராட்சியில், கட்டிமுடிக்கப்பட்டு 8 ஆண்டுகளாகியும் அடிப்படை வசதிகளின்றி, காட்சிப்பொருளாக கிடக்கும் அங்கன்வாடி மையத்தை திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் ஊராட்சி வசந்த் நகரில் அங்கன்வாடி மையம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி, கடந்த 2015-2016ம் ஆண்டு கும்மிடிப்பூண்டி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அப்போதைய எம்.எல்.ஏ சி.எச்.சேகரின் ரூ.6.50 லட்சம் நிதியில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. மேலும், இக்கட்டிடத்தில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், அப்பகுதியில் வசிக்கும் சமூக விரோதிகள் சிலர் இரவு நேரத்தில் அங்கன்வாடி கட்டிடத்தில் குடித்துவிட்டு, மதுபாட்டில்களை அங்கேயே விட்டுச் செல்கின்றனர். இதனால், அக்கட்டிடம் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இந்த அங்கன்வாடி மையத்தைச் சுற்றி முட்புதர்கள் சூழ்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. மேலும், சமீபத்தில் பெய்த மழையால் அங்கன்வாடி மையத்தைச் சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், நோய்பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு, புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை சூழ்ந்துள்ள முட்புதர்களை அகற்றி, அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

The post கட்டி முடிக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராத அங்கன்வாடி மையம்: உடனே திறக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: