ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்திருத்த மசோதா கடந்த மாதம் அறிமுகம்: கூடுதல் அவகாசம் கோரும் கூட்டுக்குழு

டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான சட்ட திருத்தம் குறித்த அறிக்கையில் மீண்டும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க 3 ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை ஒரே நேரத்திலும், அந்த தேர்தல் முடிந்த 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல்களையும் நடத்தும் வகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

இதற்கான சட்டத்திருத்த மசோதாவில் கடந்த மாத நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு அறிமுகம் செய்தது. அப்போது பல்வேறு கட்சிகளின் கோரிக்கைளை ஏற்று அம்மசோதா நாடாளுமன்ற கூட்டக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னாள் ஒன்றிய சட்ட அமைச்சர் பி.பி.செளத்ரி தலைமையில் 39 உறுப்பினர்களுடன் அமைக்கப்பட்ட இந்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா, திமுக எம்.பி.க்கள் வில்சன், செல்வகணபதி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவின் முதல் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

அப்போது மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் ஒன்றை குழுவின் தலைவர் பி.பி.செளத்ரியிடம் திமுக எம்.பி. நெல்சன் வழங்கினார். அதில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அரசியல் சாசனத்திற்கும், ஜனநாயக நடைமுறைகளுக்கும் எதிரானது என்று திமுக உறுதியாக கருதுவதாக தெரிவித்துள்ளார். எனவே இந்த மசோதா தொடர்பாக நாடு முழுவதும் விரிவான முறையில் கருத்து கேட்கப்பட வேண்டும் என்றும், அனைத்து மாநிலங்களின் கருத்துக்கள் விரிவாக கேட்கப்படுவதற்கு வசதியாக போதிய அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று கூறுள்ள அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த எந்த அடிப்படையில் முன்னாள் குடியரசு தலைவர் தலைமையிலான உயர்மட்ட குழு பரிந்துரை வழங்கியது என்பதையும், அக்குழு அளித்த அனைத்து ஆவணங்களையும் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வு செய்ய வேண்டும் என்று திமுக வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

நேற்றைய கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கான காலம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது பற்றியும், ஆய்வுக்கான கால அவகாசத்தை 3 ஆண்டுகள் வரை நீட்டிக்க வேண்டும் என்றும் கூட்டுக்குழுவின் தலைவர் சவுத்ரியிடம் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நாட்டின் முக்கியமான சட்டத் திருத்தம் என்பதால் இது குறித்து விரிவாக விவாதிக்கவும் அனைத்து தரப்பிடமும் ஆலோசிக்கவும் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக உறுப்பினர்கள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

The post ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்திருத்த மசோதா கடந்த மாதம் அறிமுகம்: கூடுதல் அவகாசம் கோரும் கூட்டுக்குழு appeared first on Dinakaran.

Related Stories: