அந்த பகுதி திறக்கப்பட்டு, அவ்வாலைய பெருமாள் அங்கு எழுந்தருளி, அவ்வழியாக சென்று சேவை சாதிப்பார். அதன் பின், பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக செல்வார்கள்.
இதனை “பரமபதவாசல்’’ என்றும் கூறுவர். வைகுண்ட ஏகாதசி அன்று நடைபெறும் இந்த பரமபதவாசல் விழாவானது, திருவரங்கத்தில் (ஸ்ரீரங்கம்) நடைபெறுவது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. காரணம், 108-திவ்ய க்ஷேத்திரத்துலேயே முதன்மையானது திருவரங்கம்தான். உலகிலேயே மிக பெரிய கோயிலாக திருவரங்கம் பார்க்கப்படுகிறது, சுமார் 6,31,000 சதுர மீட்டர் (6,790 சதுர அடி) பரப்பளவும், 4கிமீ (10,710 அடி) சுற்றளவும் கொண்டது.
அதுமட்டுமா! சுவயம் வ்யக்த க்ஷேத்திரமாக அதாவது, சுயம்பாக, தானாக உருவான கோயில். இப்படி பல சிறப்புகளை கொண்ட திருவரங்கம் கோயிலில் நடைபெறும் “வைகுண்ட ஏகாதசி’’ விழாவானது மட்டும் சிறப்பில்லாது இருக்குமா என்ன! “வைகுண்ட ஏகாதசி அன்று பரமபதவாசலை மிதித்து கடந்து வந்தால், நேரடியாக சொர்க்கத்திற்கு செல்லலாம்’’ என்பது பெரியோர்களின் வாக்கு. அது மட்டும் தெரிந்திருந்தால் போதுமா? வைகுண்ட ஏகாதசி எப்படி உருவானது? ஏன் சிறப்புகளை பெற்றது போன்ற சுவையான திருமங்கையாழ்வாரின் கதையோடு தெரிந்து கொள்வோம்.
ராப்பத்தும் ரங்கநாதரும்
கார்த்திகை திருநாளன்று திருமங்கையாழ்வார் ஒரு முறை திருவரங்கத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு பள்ளி கொண்டிருக்கும் ரெங்கநாதரை உள்ளம் குளிர, கண்ணீர் பெருகி பெருமானை பிரார்த்திக்கிறார். கார்த்திகை திருநாள் அன்று, அழுது தொழுது பெருமானை விண்ணப்பம் செய்து, பாடி, பெருமானை மகிழ்விக்கிறார். இதில் பள்ளிக் கொண்ட பெருமான் குளிர்ந்து, “அப்பா… திருமங்கையாழ்வா… உன்னுடைய பாசுரங்கள் எல்லாம் எனக்கு மிகவும் பிரியமாக இருக்கிறது. எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. உன்னுடைய ஆராதனையை மிகவும் விரும்பி ஏற்றுக் கொள்கிறேன். உனக்கு ஏதாவது வரம் தரவேண்டும் என்று நினைக்கிறேன். உனக்கு என்ன வரம் வேண்டுமோகேள்’’ என்று பள்ளிக் கொண்ட பெருமாள் கேட்கிறார். அதற்கு உடனே திருமங்கையாழ்வார் கூறுகிறார்;
“ஆமாம் சுவாமி. உங்களிடத்தில் ஒரு விண்ணப்பம் கேட்கவேண்டும் என்றுதான் நானும் திருவரங்கத்திற்கு வந்திருக்கின்றேன்’’ என்கிறார். “நீ கேட்டு நான் செய்யாமல் இருப்பேனா..? நீ என் மீது கொண்ட அளவற்ற அன்பும் – பாசமும் எனக்கு மட்டுமல்லாது இந்த உலகத்துக்கே தெரியுமல்லவா! கொள்ளை அடித்து நான் கோயில் கொண்டிருக்கும் இடத்தை கட்டினாய் அல்லாவா! வழிப்பறி செய்தேனும் பெருமானுக்கு திருப்பணி செய்தாக வேண்டுமென்கின்ற வைராக்கியத்தோடு வாழ்ந்தவர் நீ அல்லவா! ஆகையால், என்ன விண்ணப்பம் என்றுகேள்’’ என்கின்றார், பள்ளிக் கொண்ட பெருமாள், ரெங்கநாதர்.
“பெருமாளே.. இந்த நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் நம்மாழ்வார் அருளிச் செய்த, ஆயிரம் பாசுரங்களும் அமுதத்திலும் அமுதமானவை. அந்த ஆயிரம் பாசுரங்களையும் விண்ணப்பம் (இந்த இடத்தில் விண்ணப்பம் என்பதற்கான பொருள், கேட்பது) செய்ய வேண்டும் சுவாமி. வருடந்தோறும் நீங்கள் அதனை கேட்டு மகிழ வேண்டும் சுவாமி…’’ என்று திருமங்கையாழ்வார் கைகளை கூப்பி, கொஞ்சும் குரலிலே கேட்கிறார்.
அடேடே… என்ன ஒரு பெருந்தன்மை பாருங்கள், திருமங்கையாழ்வாருக்கு. தான் எழுதிய பாசுரங்களை தினமும் பெருமாள் கேட்கவேண்டும் என்று வரம் கேட்காமல், நம்மாழ்வார் அருளிய பாசுரங்களை பெருமாள் கேட்க வேண்டும் என்று வரம் கேட்கிறார். “பாசுரங்களை கேட்பதில் எனக்கு அலாதி பிரியமுண்டு. கேட்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். ஆனால், அதனை கேட்பதற்கென்று ஒரு நாள் வேண்டுமல்லவா? அந்த நாள் எந்த நாள்? அதனையும் நீயே சொல்’’ என்கிறார், பெருமாள். பெருமாள் இப்படி ஒரு கேள்வியை நம்மிடத்தில் கேட்பார் என்று சற்றும் எதிர்பாராத நம்மாழ்வார், பாசுரங்களை பெருமாள் கேட்க சிறந்த நாள் ஒன்றை யோசிக்க ஆரம்பிக்கிறார். யோசித்து பகவானிடத்தில்;
“சுவாமி.. மார்கழி மாதத்தில் ஏகாதசிக்கு பிறகு வரும் பத்து நாட்களை கணக்கீடு செய்து, நாள் ஒன்றுக்கு நூறு பாடல்கள் வீதம் பத்து நாட்களில் ஆயிரம் பாடல்களை நீர் கேட்டுவிடலாம். உமக்கும் சிரமம் இருக்காது. பாசுரம் சொல்பவருக்கும் சிரமம் இருக்காது’’ என்று சொன்னார்.
“ஹோ.. ரொம்ப நன்றாக இருக்கின்றதே!
இந்த பாசுரம் நடைமுறைக்கு ஏதாவது பெயர் வைப்போம்’’ என்று பள்ளிக் கொண்டவன்கூற, “வைக்கலாமே… “ராப்பத்து’’ என்று பெயர் வைப்போம். ஆக, நூறுநூறாக பாசுரங்களாக கேட்டு மகிழவேண்டும் சுவாமி’’ என்று விண்ணப்பம் செய்கிறார், திருமங்கையாழ்வார். திருவரங்கநாதனும் அதனை ஏற்றுக் கொண்டு, “உன் விருப்பப்படியே செய்யக் கடவுவது’’ என்று வரம் தருகிறார். அப்படி திருமங்கையாழ்வாரால் தொடங்கப்பட்டதுதான் “ராப்பத்து’’.
பகல்பத்தும் நாதமுனியும்
இன்னொரு சம்பவமும் நிகழ்கிறது. நாதமுனிகளும் ரெங்கநாதரை வழிபாடு செய்கிறார். அந்த சமயத்தில், ராப்பத்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. “சுவாமி.. இந்த “ராப்பத்து’’ கேட்டு விண்ணப்பம் செய்கிறாயே.. அதே போல், இன்னும் இரண்டாயிரம் பாசுரங்களுக்கு மேலே இருக்கின்றதே! நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தில் நீர் ஆயிரம் பாசுரங்கள் மட்டும்தானே கேட்கிராய். கிட்டத்தட்ட அனைத்து பாசுரங்களையும் கேட்பதற்கு, ஒரு கருணை காட்டக் கூடாதா?’’ என்று நாதமுனிகளும் பெருமாளிடத்தில் விண்ணப்பவிடுகிறார். அப்போது, நாதமுனிகளிடத்தில் எப்படி கேட்பது என்று கேட்கிறார்.
“ஏற்கனவே.. திருமங்கையாழ்வார் “ராப்பத்து’’ என்று பெயர் வைத்துவிட்டார். இரண்டாயிரம் பாசுரங்களை கேட்கவேண்டும் என்கின்ற எண்ணமும் ஆசையும் எனக்குள்ளும் இருக்கிறது. நான்காயிரத்தையும் நான் கேட்கவேண்டும் என்றுதான் விருப்பப்படுகிறேன் அதற்கு நீயே ஒரு வழியை சொல்’’ என்கிறார் பெருமாள். “ஏகாதசிக்கு பிறகு வரும் பத்து நாட்கள் திருமங்கையாழ்வார் சொன்னபடி பாசுரங்கள் நடைபெறட்டும். நாம் ஏகாதசிக்கு வரும் முதல் பத்து நாட்களை எடுத்துக் கொள்வோம். அதற்கு “பகல் பத்து’’ என்று பெயர் வைப்போம். “பகல்பத்து’’ – “ராப்பத்து’’ சமயங்களில் கிட்டத்தட்ட பாசுரங்கள் அனைத்தையும், விண்ணப்பம் செய்வதற்கு அருள்புரிய வேண்டும்’’ என்கிறார் நாதமுனி. சுவாமியும் அதை ஏற்றுக் கொள்கிறார். அப்படித்தான் ஆரம்பமாகிறது, “பகல்பத்து’’ – “ராப்பத்து’’.
அரங்கனின் அரையர் சேவை
இந்த “பகல்பத்து’’ – “ராப்பத்து’’ இரண்டையும் சுவாமி விண்ணப்பம் செய்வதற்கு “அரையர் சேவை’’ என்று பெயர் உண்டு. இது ஸ்ரீரங்கத்துக்கே உரிய ஒரு அற்புதமான சேவை என்றுதான் சொல்லவேண்டும். இந்த அரையர் சேவையை பார்க்காதவர்கள், அநேகமாக யாரும் இருக்க மாட்டார்கள். அரையர் சேவையை, அரையர்கள் என்று சொல்லக் கூடியவர்கள், வழிவழியாக வம்சாவளியாக வரக்கூடியவர்கள்தான் பெருமாளுக்கு விண்ணப்பம் செய்வார்கள். அரையர் சேவை செய்யக் கூடியவர்கள், சங்கு – சக்ர திருநாமம் தரித்த தலையில் பெரிய தொப்பி ஒன்றை அணிந்திருப்பார்கள். ஆடைஅணிகலன்கள் எல்லாம் அவர்களுக்கே உரித்தான சற்று வித்தியாசமாக காணப்படும். இவைகளை எல்லாம் அணிந்துக் கொண்டு, பாசுரங்களை
முத்தமிழாகவும் பெருமாளுக்கு விண்ணப்பம் செய்வார்கள்.
அதாவது… இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்று சொல்லக் கூடிய, பாசுரங்களை பாடி, நடித்து, ஆடி (நடனமாடி) பெருமாளுக்கு விண்ணப்பம் செய்வார்கள். இந்த மூவண்ணமாக விண்ணப்பம் செய்யக் கூடியதற்கு “அரையர் சேவை’’ என்று பெயர். பாசுரங்களை கைகளைக் கட்டிக் கொண்டு சொல்வதற்கு, “இயற் தமிழ்’’ என்று பொருள்.
இதையே பாடுவதாக இருந்தால், அது “இசைத் தமிழ்’’. இதுவே நடனமாடி நடித்துக் காட்டுவதற்கு, “நாடகத் தமிழ்’’. இவை மூன்றையும் சேர்த்து செய்பவர்களுக்கு, “அரையர்கள்’’ அதாவது “அரைதல்’’ என்பதன் பொருள் “விண்ணப்பித்தல்’’ என்பதாகும். இறைவனது திருச்செவிக்கு விண்ணப்பம் செய்வதுனாலே, இதற்கு “அரையர் சேவை’’ என்று பெயர்.
நாயகி உருவில் நாயகன்
இந்த அரையர் சேவை நடைபெற்றிருக்கும்போது, ரொம்ப அழகான சேவை, பத்தாவது நாள் சேவை. இந்த பத்தாவது நாட்களில்தான் ஸ்ரீரங்கத்தில் கூட்டம் அலைமோதும்.
காரணம், அதற்கும் ஓர் அருமையான கதையுண்டு. நமக்கு அனைவருக்கும் நன்கு தெரிந்த “பராசரபட்டர்’’ தாயார் சந்நதியே கதி என்று இருப்பார். பெருமாள் சந்நதிக்கு செல்லவே மாட்டார். அவருக்கு சுவாமி என்றால், சற்றுபயம். எந்த மாதிரி பயம் என்றால், நம் வீட்டில் உள்ள குழந்தைகளை போல். அம்மா என்றால் மிகவும் பிரியமாக இருப்பார்கள். அப்பா என்றால் சற்று பயமாக இருக்கும் அல்லவா.. அது போல, பராசருக்கு பயம். இப்போது பெருமாளுக்கு ஒரு ஆசை.
“பராசரன் நம் பக்கமே வருவதில்லையே. எப்போதும் தாயாருக்கே சேவை செய்கின்றானே! என்று நினைத்த பெருமாள், தாயாரிடத்தில் “பராசரனை எப்போதும் நீயே வைத்துக் கொள்கிறாயே.. என்னிடத்தில் அவனை அனுப்பமாட்டேன் என்கின்றாயே?’’ என்று பெருமாள் வருத்தம் தெரிவிக்க, தாயாரோ;“எனக்கு ஒன்று தெரியாது சுவாமி.. நீங்களாச்சு உங்கள் பக்தனாச்சு. அவன்தான் இங்கேயே இருக்கின்றான். நான் பலமுறை போ… என்று சொல்லியும் செல்ல மறுக்கின்றான். நான் என்ன செய்வது? இதற்கு இடையில் என்னை இழுக்காதீர்கள்’’ என்று தாயார் பெருமாளிடத்தில் செல்லமாக கோபிக்க; “சரி… இன்று நாம் இருவரும் ஒரு லீலைகளை செய்வோம். இன்று உன் உருவத்தில் நான் செல்கிறேன். அப்போது அவன் அருகில் நான் இருப்பேனல்லவா! அவனின் தொண்டுகளை நான் அனுபவிப்பேன் அல்லவா! ஆகையால் உனக்கு பதிலாக நான் செல்கிறேன்’’ என்று சொல்லி, காருண்யமாக ஒரு பக்தனின் அன்பை பெறவேண்டும் என்பதற்காக, ரெங்கநாதரே மனம் இறங்கிவருகிறார்.
இது எத்தகைய அருமையான வரலாறு என்று பாருங்கள். அன்றைய தினம், தாயாரின் திருவுருவத்தில், ரெங்கநாத பெருமாள் இருக்கிறார். அனைத்து அலங்காரங்களையும் செய்து, சுவாமி புறப்பட தயாராக இருக்கிறார். பராசர பட்டர், ஸ்வாமியின் அருகில் நின்று, அப்படியே கீழிருந்து “செங்கமல பொற்பாதங்களை வணங்கின… ஹாஹா.. என்ன அழகான திருவடி! என்று திருவடிகளை தரிசனம் செய்தவாறே கண்களை உயர்த்திக் கொண்டே பராசரர் இருக்கிறார்.
ஆடை அணிகலன்களை எல்லாம் ரசிக்கின்றார், அம்பாள் அழகிய புன்னகை செய்கிறாள், அதனையும் ரசிக்கிறார், தாயார் உடுத்துக்கொண்ட கிளிப்பச்சை நிறப்புடவையின் மடிப்பைக் கண்டு ரசித்தவாறே.. அம்பாளின் திருமுகம் மலர்ந்து இருப்பதை காண்கிறார், அப்படியே கண்களை உயர்த்திக் கொண்டே… மேலே வந்தார், தாயாரின் கண்களை கண்டார். கண்களை கண்டவுடன், பராசரர் திகைத்துவிட்டார்.
வழக்கமாக நாம் பார்க்கும் கண்கள் இது இல்லையே! கண்கள் ஏதோ வித்யாசமாக இருக்கின்றதே! அம்பாளுக்கு கண்கள் எப்போதும் இப்படி இருக்காதே! இது அம்பாளா? ஒரு கண் கோபமாகவும், ஒரு கண் சாந்தமாகவும் இருக்கிறதே! இப்படி பெருமாளுக்குதானே இருக்கும். (பகைவர்கள் திடீர் என்று வந்தால் அவனுக்காக கோபமான கண்ணும், பக்தனுக்காக சாந்தமான கண்ணும் உடையவர் அந்த கமலக் கண்ணன்) ஆம்..! இவர் அந்த கமலக் கண்ணனேதான். நாம் வழிபடுகின்ற தாயார் இல்லை.
“பெருமாளே நீ என்னை சோதிப்பதற்காக வந்திரோ’’ என்று திருவடிகளை பற்றிக் கண்ணீர்விட்டு கதறி அழுதார், பராசரபட்டர். திருவரங்கநாதன் காட்சிக் கொடுத்து சொன்னார்;
“அப்பா.. பராசரா, தினமும் தாயாருக்கே சேவைகளை செய்கின்றாயே.. இன்று ஒரு நாள் எனக்கு சேவை செய்யக் கூடாதா? நான் உன் அருகில் இருக்கக் கூடாதா? உனக்காகத்தான் நான் ஆசைப்பட்டு வந்துருக்கேன்’’ என்று பராசரனுக்காக தாயார் ரூபத்தில் காட்சி கொடுத்த அந்த திருநாள்தான் பத்தாவது திருநாள். அன்று பெருமாள் மோகினி
அலங்காரத்தில் சேவைசாதிப்பார்.
ரெங்கநாதரின் அரையர் சேவை
இப்பொது, “பகல் பத்து’’ – “ராப்பத்து’’ என்று நடக்கக் கூடிய மார்கழி மாதத்துடைய ஏகாதசியைதான் “வைகுண்ட ஏகாதசி’’ என்று கூறுகின்றோம். வைகுண்ட ஏகாதசியின் போது, பரமபத வாசலை கடந்துவிட்டால், சொர்க்கம் நிச்சயம் என்கின்ற ஒரு தவறான கருத்துக்கள் உண்டு. இதை ஒரு அழகான சேவைகளாக பெருமாள் காட்டுவார்.
ஸ்ரீரங்கத்தில், பரமபதவாசல் திறக்கும் சம்பவத்தை “ரெங்கநாதரின் அரையர் சேவை’’ என்றே சொல்லலாம். ரெங்கநாதர், அரையர் சேவையை சாதிக்கும் நாள் எதுவென்றால், அது வைகுண்ட ஏகாதசி அன்றுதான். அன்றைய தினம், எப்படியெல்லாம் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வருகிறார், என்பதை வர்ணித்து சிந்திப்போம். வைகுண்ட ஏகாதசி நாள் அன்று விடியற்காலையில், பரமபதவாசல் அலங்காரத்துடன் மூடப்பட்டிருக்கும். அதற்குள்ளே ரெங்கநாதஸ்வாமி ரத்தினாங்கி சாற்றி மிக அழகாக, தன் பக்தர்களுக்காக காட்சி கொடுக்க தயார் நிலையில் இருப்பார்.
அப்போது, அங்கு ஒரு கிணறு இருக்கும். அது “விரஜா நதிக்கு’’ சமமான கிணறு. அதன் தாத்பரியம் பின்வருமாறு, ஒரு ஆன்மா வைகுண்ட பதவி செல்வதற்கு புறப்பட்டுவிட்டது.
அப்படி புறப்பட்ட ஆன்மாவின் ஸ்வரூபமாக எழுந்தருள்பவர்தான் பெருமாள். அவர் போகும்போது, இந்த விரஜா நதியை தாண்டி போகவேண்டும். அங்கு நீராடிவிட்டுத்தான் ஆன்மாக்கள் பயணிக்கிறது. ஸ்வாமியை அங்கே நீராட்ட முடியாது என்பதினால், அந்த கிணற்றின் அருகே ஸ்வாமியை நிறுத்தி, அந்த தண்ணீரை எடுத்துக் கொண்டுவந்து, விரஜா நதிக்கு ஒப்பாக வேத மந்திரங்களை உச்சரித்து, அந்த நீரை மாற்றி, அதை ஸ்வாமியின் பாதங்களில் சமர்ப்பணம் செய்து, அதன் பின்னர்தான் அங்கே அதனை கடந்து வருவார்.
இப்போ அந்த விரஜா நதியினை ஆன்மா கடந்தாகிவிட்டது.
இதன் பின் பெருமாள் எப்படி வருவார் என்றால், இத்தகைய சமயங்களில் மெதுவாக ராஜநடையிட்டு வருவார். அதன் பின், சுவாமி மிகவும் வேகமாக வருவார். அப்படியே அந்த பரமபதவாசல் திறக்கப்படும், அதன் வழியாக ராஜாதிராஜன் ரெங்கராஜன் வெளியே வருவார். பக்தர்கள் அனைவரும் “ரெங்கா… ரெங்கா..’’ என பக்தி பரவசத்தில் முழக்கமிடுவர். கோயிலில் உள்ள சொர்க்கவாசல் இடத்தில், எங்கெங்கோ உள்ள பக்தனுக்கும் காட்சி கொடுப்பார்.
காரணம், சொர்க்கவாசல் வழியாக பெருமாள் அங்கும் இங்கும் கிடுகிடுவென ஓடுவார். ஆகையால், எங்கு நின்று பார்த்தாலும் பெருமாள் காட்சிக் கொடுப்பார். கிட்டத்தட்ட, அரையர் சேவை எப்படி நடைபெறுகிறதோ.. அதுபோலவே, வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள், பரமபதவாசல் வழியாக வருவதும் இருக்கும்.
ஒருமணி நேரத்திற்கும் மேலாக பக்தர்களுக்கு ரெங்கநாதன் காட்சிக் கொடுப்பார். ஆனந்தமான காட்சி! இந்த ஆன்மா எப்படி வைகுண்டத்தை சென்று அடைகிறது, என்பதை காட்டுகிற காட்சி. ஆக, பகல்பத்து – ராப்பத்து என சுவாமி இரண்டையும் விண்ணம்பம் செய்கிறார். ஆழ்வார்களின் பாசுரங்களில் சொல்லப்பட்டது போல, நமது மனதிலேயே இருக்கின்ற மனமாய அழுக்குகளை நீக்கி, யாருக்கும் துன்பம் செய்யாமல், யார் மனதையும் புண்படுத்தாது, யாருக்கும் தீங்கு நினைக்காது, ஒருவர் அழியவேண்டும் என்கின்ற எண்ணத்தை விடுத்த ஆன்மாவானது, விரஜா நதியில் நீராடி, தன்னை புதுமைப் படுத்திக் கொண்டு, தூய்மைப் படுத்திக் கொண்டு, பெருமானை தேடி போகின்ற போது, அந்த ஆன்மாவை தன் வாசலுக்கு அழைத்துக் கொள்கிறார். அதுதான் வைகுண்ட வாசலுடைய தாத்பர்யம் (காரணகாரியங்கள்). மேலே சொன்ன குணங்களை எல்லாம் வளர்த்துக் கொண்டு, சொர்க்கவாசல் வழியாக நுழைந்தோமேயானால், பரமபதத்தில் நிச்சயமாக இடம் கிடைக்கும்.
தொகுப்பு: ரா.ரெங்கராஜன்
The post பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கமே! appeared first on Dinakaran.