சட்டப்பேரவையின் 4-ம் நாள் கூட்டம் தொடங்கியது: வினாக்கள் விடைகள் நேரத்தில் துறைசார் அமைச்சர்கள் பதில்

சென்னை: சட்டப்பேரவையின் 4-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது இதில் வினாக்கள் விடைகள் நேரத்தில் துறைசார் அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி.6 தொடங்கியது. ஆளுநர் உரை நிகழ்த்தாமல் வெளியேறினார் , அதன் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு படித்து தொடங்கிய பேரவையின் இரண்டாம் நாள் கூட்டம் இரங்கல் குறிப்புடன் ஒத்திவைக்கப்பட்டது. இதில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சட்டமன்ற உறுப்பினர் தமிழ்மொழி ராஜதத்தன், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு பேரவைத் தலைவர் அப்பாவு இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். மூன்றாம் நாளான நேற்று அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக அதிமுக, வி.சி.க. ஆகிய கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. இதை தொடர்ந்து சட்டப்பேரவையின் 4-ம் நாள் கூட்ட தொடர் தொடங்கிய நிலையில், யார் அந்த சார் என்ற பேட்ஜுடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர். அண்ணா பல்கலை. விவகாரத்தை கண்டித்து கருப்புச் சட்டை அணிந்து பேரவைக்கு வந்துள்ளனர். ஆளுநர் உரை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற உள்ளது. மேலும், யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். இந்த நிலையில், உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன், கே.என்.நேரு பதில் அளித்து வருகின்றனர். அதில்,

மணிமுக்தா ஆற்றில் தடுப்பணை: துரைமுருகன்

சிறப்பு நிகழ்வாக கருதி சங்கராபுரம் வட்டம், சோழம்பட்டில் மணிமுக்தா ஆற்றில் தடுப்பணை கட்டப்படும். சட்டமன்றத்தில் உறுப்பினர் உதயசூரியன் கேள்விக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார். கடந்தாண்டு 89 தடுப்பணைகள் கட்ட அரசாணை வெளியிடப்பட்டு -60 தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு அதிக தடுப்பணை கட்ட வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளேன்.

வடசென்னையில் கழிவுநீர் பிரச்சனைக்கு தீர்வு: கே.என்.நேரு

ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு பதில் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் சென்னை 900 எம்எல்டி குடிநீர்தான் தரப்பட்டது; தற்போது 1040 எம்எல்டி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த மழை வரை தண்ணீர் பிரச்சனை சென்னையில் ஏற்படாது. வடசென்னையில் கழிவுநீர் பிரச்சனைக்கு தீர்வுகாண ரூ.946 கோடியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது.

2026ல் வடசென்னை வளர்ச்சித் திட்டப்பணி முடியும்

வடசென்னை வளர்ச்சித் திட்டப் பணிகள் 2026-ல் முடிவடையும். பணிகள் முடிவடைந்த பிறகு வடசென்னை மக்கள் முழுமையாக பயன்பெறுவார்கள்.

 

The post சட்டப்பேரவையின் 4-ம் நாள் கூட்டம் தொடங்கியது: வினாக்கள் விடைகள் நேரத்தில் துறைசார் அமைச்சர்கள் பதில் appeared first on Dinakaran.

Related Stories: