ஈரோடு, ஜன.9: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சாதி மதம், மொழி, இனத்தை தூண்டும் வகையில் வாக்கு சேகரிக்கக்கூடாது என வேட்பாளர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். கூட்டத்தை தொடர்ந்து, கலெக்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள தேர்தல் விதிமுறைகளை முழுமையாக கடைபிடிப்பது தொடர்பாக அறிவுறுத்தியுள்ளோம். குறிப்பாக சாதி, மதம், மொழி, இனத்தை தூண்டியோ அல்லது அவற்றின் ரீதியாக வேறுபடுத்தியோ, அணுகியோ வாக்கு சேகரிக்கக்கூடாது. பொருள், பணம் உள்ளிட்ட கையூட்டு வழங்கக்கூடாது. வாக்காளர்களை வாக்களிக்க வாகனங்களில் அழைத்து செல்லக்கூடாது.
மத வழிபாட்டு தலங்களில் பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது. அரசியல் கட்சி கூட்டம் நடத்துவது தொடர்பாக முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். பிரசாரத்தில் தனி நபர் தாக்குதல் இருக்கக்கூடாது. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்து வந்தால் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். அதேபோல், ரூ.10 ஆயிரத்திற்கு மேல் உள்ள பொருட்களையும் ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லக்கூடாது. ஒலிபெருக்கியை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பயன்படுத்தக்கூடாது. அரசியல் கட்சி கூட்டங்கள் மற்றும் வாக்கு சேகரிக்கும் பணியில் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது. தேர்தல் செலவினங்கனை சமர்ப்பிக்க வேட்பாளர்கள் தனியாக வங்கிக்கணக்கு தொடங்க வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ள வேட்பாளர்கள் தங்கள் மீது குற்ற வழக்குகள் இருந்தால் தொலைக்காட்சிகள் மற்றும் நாளிதழ்களில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள காலக்கெடு அளவில் 3 முறை விளம்பரம் வழங்க வேண்டும். முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேட்பு மனு தாக்கலின்போது குடியிருந்த அரசு குடியிருப்புகளுக்கான கட்டண நிலுவை தொகை இல்லை என்பதற்கான சான்றிதழ்கள் வழங்க வேண்டும். வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை முடிவு வந்த 30 நாட்ளுக்குள் தேர்தல் கணக்குகள் தாக்கல் செய்ய வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 3 வேட்பாளர்கள் குறித்த நாளில் கணக்கை தாக்கல் செய்யவில்லை.
இதனால், தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 3 பேரும் தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, தேர்தலில், முறையாக கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
கூட்டத்தில், மாநகராட்சி ஆணையரும், கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ், எஸ்பி ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், தேர்தல் நடத்தை விதிக்கான அலுவலர் பிரேமலதா, தேர்தல் தாசில்தார் சிவசங்கர் உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சாதி, மதம், மொழி, இனத்தை தூண்டும் வகையில் வாக்கு சேகரிக்கக்கூடாது appeared first on Dinakaran.