* போதை பொருள் தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவு நெருங்குகிறது
சென்னை: சென்னையில் மெத்தாம்பெட்டமின் விற்பனை செய்த வழக்கில், கோவை சிறையில் உள்ள தூத்துக்குடி பிரபல ரவுடி தம்பி ராஜாவை கைது செய்ய சென்னை போதை தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவு நடவடிக்கை எடுத்து
வருகிறது. போதை பொருள் விற்பனையில் கோவை லட்சுமிபுரம் டெக்ஸ்டுல் பாலம் பகுதியில் இரவு நேரங்களில் போதை பொருட்கள் விற்பனை நடமாட்டம் இருப்பதாக ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி விரைந்து சென்ற போலீசார், தப்பி ஓட முயன்ற நபரை பிடித்து சோதனை செய்தனர்.
அதில் 2.5 கிராம் மெத்தாம்பெட்டைமின் போதை பொருள் இருந்தது தெரியவந்தது. உடனே அந்த நபரை ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய போது, தூத்துக்குடி நாடார் தெருவை சேர்ந்த தம்பி ராஜா (60) என்று தெரியவந்தது. உடனே தம்பி ராஜாவை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், தம்பி ராஜா, தென் மாவட்டங்களை கலக்கி வரும் பிரபல தாதாவின் நெருங்கி நண்பர் என்றும், அந்த தாதாவின் குழுவினருடன் இணைந்து நெல்லை, கோவை, தூத்துக்குடி என பல்வேறு மாவட்டங்களில் 8 கொலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
மேலும், பல்வேறு வழக்குகளில் போலீசார் தேடி வந்த நிலையில், தம்பி ராஜா, தென் மாவட்டத்தை சேர்ந்த பிரபல தாதா உதவியுடன் சென்னை அசோக்நகரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ரியல் எஸ்டேட் புரோக்கர் என்று வசித்து வந்தது தெரியவந்தது. அதோடு இல்லாமல் 60 வயதான தம்பி ராஜா தனது வயது மூப்பு அடிப்படையில் அடிதடி மற்றும் குற்றங்களில் நேரடியாக ஈடுபடாமல் தனது ஆட்கள் மூலம் செய்து வந்தது தெரியவந்தது. தனது குழுவின் தலைவர் ஆணைப்படியே போதை பொருள் விற்பனை செய்து வந்ததாக தெரிவித்துள்ளார். தென் மாவட்டத்தை சேர்ந்த பிரபல தாதா, சென்னைக்கு எப்போது வந்தாலும், தம்பி ராஜாவை நேரில் சந்தித்து பேசாமல் செல்வது கிடையாது.
அவருக்கு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைப்பது என அனைத்து ஏற்பாடுகளையும் தம்பி ராஜாவே முன் நின்று செய்து கொடுத்து வந்ததாகவும், தனது ரவுடி தொழில் கூட்டாளிகளுடன் இணைந்து தம்பி ராஜா கஞ்சா மற்றும் மெத்தாம்பெட்டமின் போன்ற போதை பொருள் விற்பனையிலும் ஈடுபட்டு வந்தது போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், இதற்காக ஒவ்வொரு மாதமும் சென்னை அசோக் நகரில் இருந்து பெங்களூருக்கு சென்று மெத்தாம்பெட்டமின் மொத்தமாக வாங்கி வந்து, அதை தனது ஆதரவாளர்கள் உதவியுடன் மாவட்ட வாரியாக மெத்தாம்பெட்டமின் பிரித்து கோவை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் சென்னையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
இதன் மூலம் அவர் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட தம்பி ராஜா, பல்வேறு கொலை வழக்கில் தொடர்புடைய தென் மாவட்டத்தை சேர்ந்த பிரபல தாதாவின் நேரடி உதவியுடன் மும்பையில் உள்ள போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருப்பது அவரது செல்போன் விபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் சென்னையில் போதை பொருள் விற்பனை செய்த வழக்கில், ரவுடி தம்பி ராஜாவை கைது செய்ய, போதை பொருள் தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவு முடிவு செய்துள்ளது.
The post மெத்தாம்பெட்டமினை சென்னையில் விற்ற வழக்கில் கோவை சிறையில் உள்ள தூத்துக்குடி ரவுடி தம்பி ராஜா கைதாகிறார் appeared first on Dinakaran.