இதை முன்னிட்டு அன்று காலை உற்சவர் நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் அர்ச்சுண மண்டபத்தில் மாலை வரை எழுந்தருளி இருப்பார். மாலை 5 மணிக்கு மேல் 4ம் பிரகாரத்தில் வலம் வந்து கருட மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பின்னர் ஆழ்வார், ஆச்சாரியார்கள் மரியாதையான பின் இரவு 8.30 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைவார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நாளைமறுதினம் (10ம் தேதி) அதிகாலை நடக்க உள்ளது. இதற்காக உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 4.15 மணியளவில் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு ஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து சிம்ம கதியில் புறப்பட்டு வெளியில் வருவார்.2ம் பிரகாரம் வலம் வந்து நாழி கோட்டான் வாசல் வழியே 3ம் பிரகாரத்துக்கு வரும் நம்பெருமாள் துரைபிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வருவார்.
இதைத்தொடர்ந்து 5.15 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்படும். பக்தர்கள் புடைசூழ நம்பெருமாள் சொர்க்வாசலை கடந்து மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபம் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு வருவார். அங்கு பெருமாள் சுமார் 1 மணி நேரம் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். அதன்பின் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி நள்ளிரவு வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். நள்ளிரவு 12 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு அதிகாலை 1.15 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைவார்.விழாவையொட்டி ஸ்ரீரங்கம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு பணியில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 9ம் தேதி மதியம் 2 மணி முதல், 11ம் தேதி மதியம் 2 மணி வரை திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
The post வைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை மோகினி அலங்காரம் appeared first on Dinakaran.